சக மாணவரைக் கொன்ற 13 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை!
சீனாவில் பணத்திற்காக சக மாணவரைக் கொன்ற 13 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவனது கூட்டாளியான மற்றொரு சிறுவனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஹெய்பெய் மாகாணத்தில் ஸாங், லீ மற்றும் மா என்ற மூன்று 13 வயது சிறுவர்கள் அவர்களுடன் வகுப்பில் பயின்ற வாங் எனற மாணவனைக் கடந்த மார்ச் மாதம் தனியாக கைவிடப்பட்ட தோட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பின்னர் ஸாங் மற்றும் லீ இணைந்து வாங்கை ஒரு மண்வெட்டியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதைப்பார்த்த மா அங்கிருந்து பயந்து ஓடியுள்ளான். ஆனால், அவர்கள் இருவரும் தொடர்ந்து வாங்கை தாக்கிக் கொலைச் செய்துவிட்டு அவனது சடலத்தை அங்கேயே புதைத்துள்ளனர்,
அதைத்தொடர்ந்து, அவர்கள் வாங்கின் செல்போனிலிருந்து தங்களது வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டு அவனது செல்போனை மா விடம் கொடுத்து அழிக்கச் சொல்லியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அம்மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிக்க: பாஜகவுக்கு என்ன? ராகுலின் வியத்நாம் பயணம் குறித்து காங்கிரஸ் கேள்வி!
இந்த மூவரும் வகுப்பிலேயே வாங்கை தொடர்ந்து தாக்கித் தொந்தரவுச் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஸாங் மற்றும் லீ வாங்கிடம் இருந்த பணத்திற்காகதான் அவனைத் திட்டமிட்டு அங்கு அழைத்து வந்து கொலைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் மூவருக்கும் இன்று (டிச.30) தண்டனை அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின் படி, இந்த கொலையை திட்டமிட்ட முக்கியக் குற்றவாளியான ஸாங்கிற்கு ஆயுள் தண்டனையும், அவனுக்கு உதவி செய்த லீ எனும் சிறுவனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்றாவது குற்றவாளியான மா என்ற சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பணத்திற்காக ஒன்றும் அறியாத அப்பாவி சிறுவன் கொல்லப்பட்டதிற்கு இன்று நீதி கிடைத்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் சீன மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.