சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் (பிப்ரவரி 2) நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் இந்திய அணி, 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்
சஞ்சு சாம்சனுக்கு காயம்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது, வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சஞ்சு சாம்சனின் ஆள்காட்டி விரலில் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அடுத்த ஒரு மாதத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சஞ்சு சாம்சனுக்கு அவரது வலது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர் வலைப்பயிற்சியை தொடங்குவதற்கு 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். அதனால், வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கவுள்ள ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் கேரள அணிக்காக சஞ்சு சாம்சன் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அபிஷேக் சர்மாவுக்கு ஜோஸ் பட்லர் பாராட்டு!
கடந்த ஆண்டு வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சஞ்சு சாம்சன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். அவர் 7 போட்டிகளில் 3 சதங்கள் விளாசினார்.
இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடரில் முதல் போட்டியில் அவர் எடுத்த 26 ரன்களே அவரது அதிகபட்சமாகும்.
இதையும் படிக்க: பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு, இந்திய அணி வெள்ளைப் பந்து போட்டிகளில் அடுத்த சில மாதங்களுக்கு விளையாடப் போவதில்லை. வருகிற ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி இருதரப்பு தொடரில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத நிலையில், வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் சம்சு சாம்சன் இடம்பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.