சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்' - ஆதாயம் உண்டா?
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். ரிஷபத்துக்கு லாப ஸ்தானமாகிய 11-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார். பல விஷயங்கள் நல்லபடியாக மாறி நன்மைகள் பெருகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. சனி பகவான் இதுவரையிலும் 10-ம் இடத்தில் அதாவது கும்பத்தில் அமர்ந்துகொண்டு, பலவிதமான கஷ்டங்களையும் அழுத்தங்களையும் கொடுத்து வந்தார். மார்ச் 29 முதல் அந்த நிலை மாறப்போகிறது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
2. சமூகத்தில் பெரிய பிரமுகர்களின் அறிமுகமும் அதன் மூலம் பல ஆதாயங்களும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வந்து, உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும். நாடாளும் வி.ஐ.பிகள் அறிமுகம் ஆவார்கள். உங்களின் அந்தஸ்து உயரும். சிலருக்குப் புது பொறுப்புகள் தேடி வரும்.
3. குடும்பத்தில், இதுவரையிலும் இருந்துவந்த குழப்பநிலை மாறும். வீட்டில் குதூகலம் நிறைந்திருக்கும். குழந்தைப் பேறு வாய்க்கவில்லையே என வருந்திக்கொண்டிருக்கும் தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.
4. பொருளாதாரத்தைப் பொறுத்தவரையிலும் பணவரவுக்குக் குறை இருக்காது. பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்க புது வழி பிறக்கும். எனினும் வீண் ஆடம்பரம் வேண்டாம். இயன்றவரையிலும் சேமித்து வையுங்கள்.

5. இந்தப் பெயர்ச்சிக்குப் பிறகு சனி பகவான் உங்கள் ராசியையும் ராசிக்குக்கு 5 மற்றும் 8-ம் இடத்தையும் பார்க்கிறார். சனி பகவானின் பார்வை ராசியில் விழுவதால், சில நேரங்களில் முன்கோபம், டென்ஷன் வந்துபோகும். சிலருக்குச் செரிமானப் பிரச்னைகள் வரலாம்; உணவில் கவனம் தேவை. அதேநேரம் தைரியமாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள்.
6. சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்துங்கள். சில நாட்களில் தூக்கம் கெடும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.
7. சனி பகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், வாகனம் இயக்கும்போதும் சாலையைக் கடக்கும்போதும் கவனம் தேவை. சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.
8. இந்த ராசியைச்சேர்ந்த ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு, பொதுவாகவே சனிபகவான் பெரிய கெடுதலைக் கொடுக்கமாட்டார். அனைத்து நன்மைகளும் உண்டாகும்; சனி பல வகைகளிலும் யோகத்தைத் தருவார்.
9. கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் ஆரோக்கியம் மற்றும் உத்தியோகத்தில் அதீத கவனம் செலுத்தவேண்டும். சில விஷயங்களை நீங்களே முன் நின்று நடத்தவேண்டும். சிறு கவனக்குறைவும் பல பிரச்னைகளைத் தரக்கூடும்.
10. மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் கூடும். குறிப்பாக அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்பைச் சரியானபடி பயன்படுத்திக்கொண்டால் முன்னேற்றம் உண்டாகும்.
11. ரிஷப ராசியைச் சேர்ந்த மாணவ மாணவியர், அதிக மதிப்பெண்பெறும் வகையில் சூழல் உருவாகும். பொதுத்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு உண்டு.

12. பெண்களுக்குப் பிறந்த வீட்டு வழியிலிருந்து சொத்து கிடைக்கலாம். வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
13. தொழிலில் புகழும் உயர்வும் உண்டாகும். கலைஞர்களுக்கு, போதுமான வருமானமும் பெரும் புகழும் கிடைக்கும். நீங்கள் பிரபலமாவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் லாபம் தரும். சிறு தொழில் செய்பவர்கள், அதை விரிவாக்க முயற்சி எடுக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.
14. உத்தியோகத்தில், உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மற்றபடி புதிய விஷயங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள். பணியிடத்தில் கூட்டு முயற்சி, உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
15. அடுத்த இரண்டரை ஆண்டு காலம், புதிய நட்பில் கவனமாக இருக்கவும். சகவாச தோஷத்தால் அவச்சொல்லும் இழுக்கும் உண்டாகலாம். உங்களின் செல்வாக்கைச் சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு.