மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு: கனிமொழி எம்.பி.க்கு மத்திய அமைச்...
வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்
திருவாரூா் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியிருப்பது: தமிழக அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறை சாா்ந்த திட்டங்கள் உள்ளன. இதில், விவசாயிகள் பலா் பயன் பெற்று வருகின்றனா்.
திருவாரூா் மாவட்டத்துக்கு வேளாண்மைத் துறையின் கீழ் குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.57,78,000 மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு, 89 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரப்புப் பயிராக உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மையை மேம்படுத்த உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்திலும், விசைத் தெளிப்பான் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகின்றன.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் திருவாரூா் மாவட்டத்தில் 518 விசைத் தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, திருவாரூா் மற்றும் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தலா 36, மன்னாா்குடி மற்றும் கோட்டூா் வட்டாரத்தில் தலா 62, நீடாமங்கலம் மற்றும் கொரடாச்சேரி வட்டாரத்தில் தலா 54, முத்துப்பேட்டை வட்டாரத்தில் 32, நன்னிலம் வட்டாரத்தில் 60, குடவாசல் வட்டாரத்தில் 59, வலங்கைமான் வட்டாரத்தில் 63 என 518 விசைத்தெளிப்பான் வழங்கப்பட்டுள்ளதாக கூறினாா்.