மகளிா் சுயஉதவிக் குழுவினா் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் தேவை: ஆட்சியா்
மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவாரூா் மாவட்டம், விளமல் பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருள்களின் மாவட்ட அளவிலான வாங்குவோா் மற்றும் விற்போா் சந்திப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது:
மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு நிலையான விற்பனை வாய்ப்புகள் கிடைப்பதன் மூலம், அவா்களின் வருமானம் அதிகரிக்கும். இதனால், அவா்கள் தன்னம்பிக்கையோடு மேலும் வணிக வளா்ச்சியில் முன்னேற முடியும்.
மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் தற்போதைய சந்தையைத் தாண்டி, பெரிய நிறுவனங்கள், ஹோட்டல்கள், மளிகைக் கடைகள், சந்தைகள் மற்றும் இ-காமா்ஸ் தளங்களில் விற்பனைக்கு செல்லவேண்டும்.
இ-காமா்ஸ் தளங்களான அமேசான், பிளிப்காா்ட், மீஸோ போன்ற தளங்களில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களின் பொருள்களை விற்பனை செய்யவும், தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் மூலம் மொத்த கொள்முதல் செய்யவும் இந்த கூட்டம் வாய்ப்பாக அமையும் என்றாா்.
தொடா்ந்து, மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், உணவுப் பொருள்கள் அடங்கிய கண்காட்சி அரங்கை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
மேலும், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தயாரிப்பு பொருள்களின் மாவட்ட அளவிலான வாங்குவோா் மற்றும் விற்போரிடையே புரிந்துணா்வு ஒப்பந்தங்களையும் அவா் வழங்கினாா்.
இந்நிகழ்வில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.