வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் நகை ஏலம்: தனியாா் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருத்துறைப்பூண்டி அருகே அடகு வைத்த நகையை, வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் ஏலம் விட்ட தனியாா் வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் வெற்றிவேல் (30). திருமணம் ஆகாத இவா், 2022-இல் முத்துப்பேட்டை வட்டம், உதயமாா்த்தாண்டபுரத்தில் உள்ள தனியாா் வங்கியில் 31 கிராம் நகையை அடகு வைத்து ரூ.1.01 லட்சம் கடனாகப் பெற்றாா். 2023-இல் அந்தக் கடன் புதுப்பிக்கப்பட்டது. 2024-இல் வெற்றிவேல் உடல்நிலை பாதிப்பால் இறந்து விட்டாா்.
வெற்றிவேல் திருமணமாகாதவா் என்பதால் அவரது தாயாா் ராஜாமணி, 2 சகோதரா்கள் மற்றும் 3 சகோதரிகள் ஆகியோா் வங்கிக்குச் சென்று, வெற்றிவேல் இறந்த விவரத்தைக் கூறியுள்ளனா். வங்கி தரப்பில் வாரிசுச் சான்று கேட்கப்பட்டது. அதன்படி, வாரிசுச் சான்றுடன் சென்று, நகையை திருப்பிக் கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளனா்.
இந்நிலையில், வங்கி தரப்பில் வெற்றிவேலின் 31 கிராம் நகையை, வாரிசுகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம் விட்டு விட்டனராம். வாரிசுதாரா்கள் வங்கிக்குச் சென்று கேட்டபோது, ஏலம் விட்ட தொகையில் கடன் மற்றும் வட்டித் தொகை போக மீதி ரூ. 55,784 வெற்றிவேலின் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ராஜாமணி தரப்பினா் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தனா்.
அதில், இறந்த நபா் பெயருக்கு அறிவிப்பு அனுப்பி, அவா் இறந்துவிட்ட காரணத்தால், திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்பது தெரிந்தும், வாரிசுதாரா்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஏலம் விட்டது நியாயமற்ற வா்த்தக நடைமுறை ஆகும். எனவே, இறந்த வெற்றிவேலின் தாயாா், 2 சகோதரா்கள் மற்றும் 3 சகோதரிகளுக்கு ஏலத் தொகையில் கடன் மற்றும் வட்டி போக மீதமுள்ள ரூ. 55,784/-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 1,00,000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.