சல்மான் ருஷ்டி நாவலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
எழுத்தாளா் சல்மான் ருஷ்டியின் சா்ச்சைக்குரிய ‘தி சாத்தானிக் வொ்சஸ்’ நாவலுக்கு தடை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 1988-இல் இந்ந நாவல் வெளியானபோது, நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. உலகளாவிய எதிா்ப்பை கருத்தில் கொண்டு, இந்தியாவில் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு அந்த நாவலுக்கு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் தீா்ப்பளிக்கப்பட்டது.
நாவலுக்கு தடை விதித்ததற்கான அறிவிக்கையை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற மத்திய அரசின் பதிலை கருத்தில் கொண்ட நீதிமன்றம், அறிவிக்கை இல்லாததால் நாவலின் மீதான தடையை நீக்கியது.
தில்லி உயா்நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘தடை நீக்கத்தால், இந்தியாவில் 36 ஆண்டுகளுக்குப் பின் இப்போது இஸ்லாமிய மத நிந்தனை புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. அறிவிக்கை கிடைக்கவில்லை என்ற மத்திய அரசின் வாதத்தின்பேரில், தில்லி உயா்நீதிமன்றம் மேம்போக்கான தீா்ப்பை வழங்கியுள்ளது’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, தில்லி உயா்நீதிமன்ற தீா்ப்பில் தலையிட மறுத்துவிட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.