இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் க...
சவுண்ட்பார் - ஸ்பீக்கர்: வேறுபாடுகள் என்னென்ன?
சவுண்ட்பார்களும் ஸ்பீக்கர்களும் ஒலியின் தரத்தை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், இவற்றின் தனித்துவமான பலன்களும், பயன்படுத்தப்படும் நோக்கமும் பாடல்களைக் கேட்கும் விருப்பத்தைப் பொறுத்து மாறுபடுகின்றன.
ஸ்பீக்கர் என்பது ஒலிப்பெருக்கி எனலாம். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகள் ஒலியின் தரத்தை மேம்படுத்துகின்றன. இதேபோன்று சவுண்ட்பார் என்பது, ஒலிப்பெருக்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் எனலாம். அதாவது மெல்லிய ஒலிப்பெருக்கி.
சண்ட்பார்களுக்கும் ஸ்பீக்கர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
வடிவம், அமைப்பு
சவுண்ட்பார்: சவுண்ட்பார் என்பது கச்சிதமான வடிவமைப்பு கொண்டது. இதனுள் பல ஸ்பீக்கர்களையும் உள்ளடக்கி வைத்துக்கொள்ளலாம். அதனால் குறைந்த அளவிலான இணைப்பு வயர்களே தேவைப்படும்.
ஸ்பீக்கர்ஸ்: இவை பாரம்பரிய ஒலிப்பெருக்கிகளைப் போன்ற வடிவமுடையவை. அலமாரியிலோ அல்லது சுவர்களிலோ பொருத்திக்கொள்ளும்படியானவை. ஒலி ஊக்கி (ஆம்ப்ளிஃபயர்), ஆடியோ ரிசீவர் என பல சாதனங்கள் கூடுதலாகத் தேவைப்படும். கூடுதல் ஸ்பீக்கர்களை வீட்டின் சுவர்களைச் சுற்றிலும் மாட்டிக்கொள்ளலாம்.
ஒலியின் தரம்
சவுண்ட்பார்: இவை பெரும்பாலும் தொலைக்காட்சியின் ஒலித்தரத்தை மேம்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன. பிரீமியம் மாடல் சவுண்ட்பார்களில் மெய்நிகர் வடிவில் சுற்றிலும் ஒலியை பரவச் செய்து, சிறப்பான ஒலியின் அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால், பெரும்பாலும் இவை ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஒலியையும் ஆழ்ந்து வெளிப்படுத்தாது.
ஸ்பீக்கர்ஸ்: பொதுவாக மிகச்சிறந்த ஒலி அனுபவத்தைக் கொடுப்பவை. உச்சபட்ச பேஸ், ஒலியின் ஏற்ற இறக்கங்கள் என சினிமா தியேட்டரின் ஒலி அனுபவத்தைத் துல்லியமாகக் கொடுக்கக் கூடியவை.
விரிவாக்க அளவு
சவுண்ட்பார்: குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவை. சில மாடல் சவுண்ட்பார்கள் துணை ஒலி ஊக்கிகள் அல்லது ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தும்படி இருக்கும். ஆனால், நிறுவனங்களைப் பொறுத்து இந்த அம்சம் மாறுபடும்.
ஸ்பீக்கர்ஸ்: நமக்குத் தேவையான அளவுக்கு இவற்றை விரிவாக்கம் செய்து பயன்படுத்தலாம். சில சாதனங்களைக் கொண்டு சுற்றிலும் மேம்படுத்தப்பட்ட ஒலி அளவை உருவாக்கலாம்.
அழகியல், இடத்தைப் பொறுத்த பயன்பாடு
சவுண்ட்பார்கள் பொதுவாகவே மெல்லியதாகவும், செவ்வக வடிவிலும் இருப்பதால் தொலைக்காட்சிக்கு அடியில் எளிமையாகப் பொருந்திவிடும். சிறிய அறை, அல்லது பெரிய அடுக்குமாடிகளில் எளிமையான மற்றும் நவீன அலங்காரங்களில் ஒன்றாக கச்சிதமாக பொருந்திவிடும்.
ஆனால், ஸ்பீக்கர்கள் அவ்வாறு அல்ல. அறையின் அளவு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து மாறுபடும். ஸ்பீக்கர்களின் இணைப்பிற்கு சுவர் அல்லது அலமாரிகளில் தனி இடம் தேவைப்படும். இவை பெரிய அறைகளுக்கும் பொருந்தக்கூடியவை. சுவர்களைச் சுற்றிலும் ஸ்பீக்கர்களை அமைப்பதன் மூலம் சிறந்த ஒலி அனுபவத்தை அளிக்கும்.
விலை
சவுண்ட்பார்கள் பெரும்பாலும் மலிவான விலையிலும் கிடைக்கின்றன. இவை வடிவமைப்பில் மெல்லிதானவை என்பதால், அதிக திறன்களை வழங்கும் டோல்பி அட்மோஸ், உள்ளிணைக்கப்பட்ட ஒலி ஊக்கிகள், வயர்கள் இல்லாமல் தொலைக்காட்சியுடன் இணையும் திறன் கொண்டவையும் பட்ஜெட் விலையிலேயே சந்தையில் கிடைக்கின்றன.
ஆனால், ஸ்பீக்கர்களின் முழு ஒலித் திறனைப் பெறுவதற்கு கூடுதலாக ஒலிப்பெருக்கிகள், ஒலி ஊக்கிகள், ஆடியோ ரிசீவர், வயர்கள் என பெரிய பொருள் செலவுத் தேவைப்படும். ஆனால், மேம்படுத்தப்பட்ட ஒலிகளை விரும்புபவர்களுக்கு செலவிடும் பணத்துக்கு தரமான ஒலி அமைப்பை ஸ்பீக்கர்கள் வழங்கும்.
இதையும் படிக்க | ஓலா ரோட்ஸ்டர் டெலிவரியில் தாமதம்! இதுவரை ஒரு வண்டி கூட விற்கவில்லை!