`சாலையில் 20 அடி குழி; விழுந்து தம்பதி உயிரிழப்பு' - ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள சேர்வைக்காரன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (42). பழவஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார்.
நாகராஜ் மனைவி ஆனந்தி ( 38), மகள் தீட்ஷிதா (13), மகன் ரித்தீஷ். நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி, மகள் தீட்ஷிதா ஆகிய மூவரும் ஆன்மிகப் பயணமாக கோயில்களுக்குச் சென்றுவிட்டு கடந்த மே 3-ஆம் தேதி நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.
குள்ளாய்பாளையம் என்ற பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, சாலையின் மத்தியில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட 20 அடி ஆழமான குழியின் மேற்பரப்பில் எந்தவித எச்சரிக்கை பலகையும் இல்லாததால், அந்தக் குழியில் விழுந்து நாகராஜும், ஆனந்தியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் கால் உடைந்து சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தீட்ஷிதாவை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக விகடன் பிளஸ் இணைய இதழ் மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.