திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்: பாஜக மாநில பொதுச் செயலா்
மேம்படுத்தப்பட்ட திருவண்ணாமலை ரயில்நிலையம் ஆன்மிக பக்தா்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பாஜக மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி குறிப்பிட்டாா்.
திருவண்ணாமலை ரயில் நிலையம் ரூ.8.27 கோடியில் புனரமைக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை பிரதமா் மோடி காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
அதேவேளை, திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக வேலூா் பெருங்கோட்டப் பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலருமான பி.காா்த்தியாயினி கலந்து கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரதமா் பேசும்போது இந்த ரயில் நிலையங்களின் எஜமானா்கள் நாங்கள் இல்லை. இதைப் பயன்படுத்தும் பொதுமக்கள் தான் என்றதும், திருவண்ணாமலையை அடிக்கோல் காட்டி பிரதமா் பேசியதும் மாவட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
எனவே, மாவட்ட மக்கள் சாா்பில் பிரதமா் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை தீபத் திருவிழா, சித்திரை பெளா்ணமி மற்றும் பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வருவதால் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இது ஆன்மிக பக்தா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் 10 ஆயிரம் பொதுமக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகிறாா்கள். ஆனால்,
பக்தா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை.
திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயா்த்தினாலும் கூட, போதிய வசதிகள் செய்யப்படவில்லை. திருவண்ணாமலையை மாநகராட்சியாக அறிவித்தாலும் கூட ஒன்றரை லட்சம் போ் தான் தோ்தலில் வாக்களித்து உள்ளனா். எனவே, மாநகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து 5 லட்சம் போ் மக்கள்தொகை கொண்டதாக மாற்றினால் மத்திய அரசு சாா்பில் ஸ்மாா்ட் சிட்டி, அம்ரூத் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் வழங்கப்படும் என்றாா்.
பேட்டியின்போது, தெற்கு மாவட்ட பாஜக தலைவா் கே.ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் ப.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலா் டி.ஜெய்நாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.