காரைக்கால் நகரில் 50 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு
சாலையை அடைத்துக் கூட்டம்... ஆம்புலன்ஸை மறித்து அதிகாரப் பேச்சு...
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் ஆணவப் பேச்சு, உயிர் காக்கும் சேவையை இரவு, பகலாகச் செய்யும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களைக் கொதிப்படைய வைத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று முழக்கமிட்டு, சட்டமன்றத் தொகுதி வாரியாக பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு 10 மணியளவில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, தனது பேச்சைத் தொடங்கியபோது, அடுத்த நொடியே சைரன் ஒலித்தபடி கூட்டத்தைப் பிளந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வர, கடுப்பானார்.
`இனி ஆம்புலன்ஸ் வந்தா... டிரைவரே ஹாஸ்பிட்டலுக்குப் போக வேண்டியிருக்கும்!’
ஆம்புலன்ஸில் நோயாளி இல்லை எனத் தெரியவந்ததால், கடும் கோபமாகி முகம் சிவந்த எடப்பாடி, ``யே, வண்டிய நிறுத்துயா! யாரும் அடிக்காதீங்க. வேணும்னே கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸை விட்டு கலாட்டா பண்றாங்க. கிட்டத்தட்ட 20, 30 கூட்டத்துல இதுமாதிரி ஆம்புலன்ஸ் விட்டுருக்காங்க. இந்த அரசுக்கு எச்சரிக்கை விடுறோம். அடுத்த முறை ஆம்புலன்ஸ் வெறும் வண்டியா வந்தா, ஆம்புலன்ஸை ஓட்டிக்கிட்டு வருபவரே பேஷன்ட்டா மாறி ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும்’’ என்றார் பகிரங்கமாக. இதற்கிடையே, காவல்துறையினர் வழி ஏற்படுத்தி, ஆம்புலன்ஸை வெளியே அனுப்பி வைத்தனர்.

புகார் அளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!
எடப்பாடியின் இந்தப் பேச்சுக்கு அ.தி.மு.க-வினர் `விசில்’ அடித்து அலப்பறை செய்தனர். `முதலமைச்சராக இருந்தவர் அவசரகால மருத்துவ உதவிக்காக 24 மணி நேரமும் செயல்படும் பொதுச்சேவை வாகனத்தை மறித்து, இப்படி நடந்துகொள்வது சரியில்லை’ என்று ஆளும்கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்தது.
இந்த நிலையில், அ.தி.மு.க கூட்டத்தில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர் புகார் அளித்ததன் அடிப்படையில், அடையாளம் தெரியாத 5-க்கும் மேற்பட்டோர் மீது `அவதூறாகப் பேசுதல், தாக்க முற்படுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல்’ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அணைக்கட்டு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
`எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்!’
`கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதே குற்றம். எடப்பாடி பழனிசாமியைத்தான் முதல் குற்றவாளியாகச் சேர்த்து, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி, தி.மு.க-வின் ஆதரவு அமைப்பான `தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின்’ மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் டி.ஜி.பி அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர். அதேபோல, மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர் என அடுத்தடுத்து பல்வேறு மாவட்ட காவல்துறையிலும் எடப்பாடி மீது ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
`விதவிதமான இடையூறுகளைச் செய்கிறது... தி.மு.க அரசு!’
களேபரமான இந்த விவகாரத்தில், `அன்று நடந்தது என்ன?’ என்பது பற்றி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், ``மக்கள் கடல் அலைபோல் கலந்து கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க ஆட்சியாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆரம்பக் கட்டத்தில்... மின்சாரத்தை நிறுத்துவது, போக்குவரத்தை சீர்செய்யாமல் காவல் துறையினரின் ஒத்துழைப்பைக் குறைப்பது போன்ற இடையூறுகளை தொடர்ச்சியாக செய்து வந்தனர். தற்போது நோயாளிகள் இல்லாத நிலையிலும் ஆம்புலன்ஸை மக்கள் கூட்டத்துக்கு இடையே செல்லவிட்டு, பயணத்தைச் சிதைக்கின்றனர்’’ என்று குற்றம்சாட்டியவர்,

`இது அற்பத்தனமான செயல்!’
``அணைக்கட்டு பிரசாரத்தின்போது வந்த ஆம்புலன்ஸில் நோயாளிகளோ, அடிபட்டவர்களோ யாரும் இல்லை. முறையான சீருடை அணியாத ஓர் ஓட்டுநர், `இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் எங்கள் பொதுச்செயலாளர் சிறப்புப் பேரூரை ஆற்றும் கூட்டத்துக்கு இடையே வாகனத்தில் அதிவேகமாகச் சென்றது கவலைக்குரியது. வாகனங்கள் செல்வதற்கு மாற்றுவழி இருந்தும்கூட, காவல் துறையினர் அதுகுறித்து கவலைகொள்ளாமல், நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை செல்ல வைத்து கலவரத்தை ஏற்படுத்த நினைப்பது ஆட்சியாளர்களின் சின்ன புத்தியைத்தான் காட்டுகிறது. இதுபோன்ற அற்பத்தனமான செயல்களால் எடப்பாடியாரின் புகழையோ, அவருக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பையோ, நன்மதிப்பையோ சீர்கு லைக்க முடியாது’’ என்று கூறியிருக்கிறார் கே.சி.வீரமணி.
`பொதுச்சேவை வாகனத்துக்கு வழிவிடுவதுதான்... மாண்பு!’
இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி, தி.மு.க-வின் வேலூர் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமாரிடம் கேட்டபோது, ``ஆம்புலன்ஸில் ஆளே இல்லை என்கின்றனர். அது நோயாளியை மீட்கச் சென்று கொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் என்பதுகூடப் புரியாதா என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, பள்ளிகொண்டாவில் இருந்து இரவு 9.45 மணிக்கு அந்த ஆம்புலன்ஸ் புறப்பட்டு வந்திருக்கிறது. அன்று இரவு 8.30 மணிக்கு எடப்பாடியின் கூட்டம் நடப்பதாகச் சொல்லி, இரவு 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தாமதமாக வந்ததால் கூட்டம் அவர் வருவதற்கு முன்பே கலைந்தது. மக்கள் வீடு திரும்புவதைப் பார்த்து, கூட்டம் முடிந்துவிட்டதாக நினைத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை இயக்கிச் சென்றிருக்கிறார். பொதுச்சேவை வாகனம் என்பதால், வழிவிட்டு ஒதுங்கி நிற்பதுதான் தலைவருக்கான மாண்பும், மரியாதையும்’’ என்றவர்,

`பேஷன்ட் ஆகிவிடுவாய்’ என்று மிரட்டுவது சரியா?
``எடப்பாடி பழனிசாமி, `பேஷன்ட் ஆகிவிடுவாய்’ என்று பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது. அது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ கூட்டம் போட்டாலும் ஆம்புலன்ஸ் வரத்தான் செய்கிறது, வழிவிடத்தான் செய்கிறார்கள். காரணம், சாலை வழியை மறித்துத்தான் கூட்டம் நடத்துகிறோம். சாலையை முழுமையாக அடைத்துக்கொண்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மீது பழி சொல்வதை பார்க்கும்போது அ.தி.மு.க-வினருக்குத்தான் சின்னப்புத்தி இருப்பதுபோலத் தெரிகிறது. 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்குத் தெரிந்துவிடும்’’ என்றார் காட்டமாக.
சாலையில் கூட்டம்... அனுமதி அளிக்கக் கூடாது!
எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கும் முன்பு, ஒன்றை யோசித்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் கடந்து செல்ல அதிகபட்சம் ஐந்து நிமிடங்களே ஆகும். அதையே பொறுத்துக்கொள்ள முடியாமல் இவ்வளவு மிரட்டுகிறார். ஆனால், பொதுப் போக்கு வரத்து சாலையை 3 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்துக்கொண்டு, மக்களுக்குத் தான் இடையூறு விளைவித்ததை அவர் உணரவேயில்லை.
இவர் மட்டுமல்ல, மோடி, ஸ்டாலின், விஜய் என்று எல்லோருமே `ரோடு ஷோ’ என்கிற பெயரில் சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு அலப்பறை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். சாலைகள், போக்குவரத்துக்கானவை... பிரசாரம் செய்வதற்கானவை அல்ல. இதுகுறித்து உச்ச நீதிமன்ற உத்தரவே இருக்கிறது. பொதுச்சாலைகளை ஆக்கிரமித்து எந்தவிதக் கூட்டமும் நடத்தக் கூடாது. ஆனால், விதியை மீறித்தான் இது போன்ற கூட்டங்களை நடத்துகிறோம் என்பதைக்கூட உணராத இவர்களெல்லாம் மக்கள் சேவகர்களாம்!
இனி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, புதுக்கட்சி, பழையக்கட்சி என்று அனைத்துக் கட்சியினருமே... தாங்கள் மக்களுக்காக சேவை செய்ய முன்வந்திருப்பதாகக் கூறிக் கொள்வது உண்மை என்றால், இப்படி சாலைகளில் கூட்டம் நடத்துவதை அவர்களாகவே தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால், மைதானங்களில் நடத்திக்கொள்ளட்டும்.
காரணம், மக்கள்தான் இங்கு எஜமானர்கள். மைக் பிடிப்பவர்கள் அல்லர்.