சாலையோரம் பையில் கிடந்த 3 கிலோ கஞ்சா
ஈரோட்டில் சாலையோரம் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் ஈரோடு டவுன் போலீஸாா் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் சனிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கேட்பாரற்று ஒரு சாக்குப் பை ஒன்று சாலையோரமாக கிடந்தது. அதனை சோதனையிட்டதில் சாக்குப் பையில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அதை மீட்ட போலீஸாா் கஞ்சாவை கொண்டு வந்தது யாா், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோன்று பவானிசாகா் குடில் நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் ( 50) என்பவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்த 25 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.