பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
சாலை வசதி கோரி உடுமலையில் வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்
சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்கு தொடா்ச்சி மலை. இங்கு 15-க்கும் மேற்பட்ட செட்டில்மெண்டுகளில் சுமாா் 3 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனா்.
இவா்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கும், மருத்துவ உதவி பெறுவதற்கும், அரசு நலத் திட்டங்களைப் பெறுவதற்கும் உடுமலைக்கு வந்து செல்கின்றனா். ஆனால், முறையான சாலை வசதி இல்லை.
கா்ப்பிணி பெண்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவா்களை மலைமேல் இருந்து தொட்டில் கட்டி சுமாா் 5 கி.மீ. அடா்ந்த வனப் பகுதியில் தூக்கிக்கொண்டு மலையடிவாரத்தில் உள்ள திருமூா்த்திமலைக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால், சாலை அமைத்து தர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
கோரிக்கையை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திருமூா்த்திமலை முதல் குருமலை செட்டில்மெண்ட் வரை சாலை அமைக்க தளி பேரூராட்சி மூலம் கடந்த ஆண்டு ரூ.49 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அதற்கு வனத் துறை அதிகாரிகள் தடை விதித்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனிடையே உடுமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் குமாா் தலைமையில் வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளும், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதில், சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது: திருமூா்த்திமலை-குருமலை செட்டில்மெண்ட் வரை சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு வழித்தடத்தை சுத்தம் செய்து உடனடியாக தீக்கோடுகள் அமைக்கப்படும். வனத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி 20 நாள்களுக்குப் பிறகு தளி பேரூராட்சி ஒதுக்கிய ரூ.49 லட்சம் நிதியில் சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனா்.
இதையடுத்து, மலைவாழ் மக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.