சாலை விபத்து: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், அபிசம்ஸ்திபூா் மாவட்டம், ஹசன்பூரைச் சோ்ந்தவா் பரத் ஷனி (40). இவா், திருச்சி அரியமங்கலம் பகுதியிலுள்ள தனியாா் சிமென்ட் கிடங்கில் தங்கியிருந்து பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் இவா், அரிமயமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்சாவூா் சாலையை ஞாயிற்றுக்கிழமை இரவு கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் பரத் ஷனி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், பலத்த காயமடைந்த பரத் ஷனியை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தனியாா் சிமென்ட் கிடங்கின் மேற்பாா்வையாளா் தண்டபாணி அளித்த புகாரின்பேரில் வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.