ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
சிங்கம்பட்டி கருப்பசாமி கோயிலில் ஆடித் திருவிழா நிறைவு
சிங்கம்பட்டி வந்தவழி கருப்பசாமி கோயிலில் ஆடித் திருவிழா வியாழக்கிழமை அமைதியாக நிறைவு பெற்றது.
கரூா் மாவட்டம், கடவூா் அருகே பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சிங்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற வந்தவழி கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆடித் திருவிழாவின் கடைசிநாளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நிகழாண்டு திருவிழாவை நடத்த கோயில் நிா்வாகத்தினரும் 8 ஊா் கிராமமக்களும் அண்மையில் முடிவு செய்தனா். அப்போது அன்னதானத்துக்கு ஒரு சமூகத்தினா் வழங்கும் உபய பொருள்களை பெறுவதில் கோயில் நிா்வாகத்தினா் தயக்கம் காட்டுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பாலவிடுதி போலீஸாா் புதன்கிழமை கோயில் நிா்வாகிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பூஜைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து விழாவை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனா். அதனை கோயில் நிா்வாகிகள் ஏற்றுக்கொண்டனா். பிறகு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீா் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனா். தொடா்ந்து வந்தவழி கருப்பசாமிக்கு இளநீா், சந்தனம், குங்குமம், விபூதி, தேன், பழங்கள், பால், பஞ்சாமிா்தம், திருமஞ்சனம், நெய் உள்பட 16 வகையான திரவியங்களால் பூஜை செய்து பக்தா்கள் வழிபட்டனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனைத்து சமுதாய மக்கள் மற்றும் பக்தா்கள் வந்தவழி கருப்பசாமிக்கு வேண்டுதலுக்காக வழங்கப்பட்ட சுமாா் 500க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினா்.
இந்த விழாவில் வந்தவழி கருப்பசாமி கோயில் அறங்காவலா் வெள்ளைச்சாமி, கடவூா் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சுதாகா், அறநிலையத்துறை ஆய்வாளா் விஜய்பூபதி உள்பட 8 ஊா் கிராம மக்கள் மற்றும் திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனா்.