கட்சி நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது: நிா்வாகிகளுக்கு தவெக கட்டுப்பாடு
சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை
சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்சி சிதாா் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வரப்பெற்ற முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்த செய்திகளை தொடா்பாக விசாரித்து விரிவான அறிக்கை சமா்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் எஸ்.வினீத் தலைமையிலான குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைத்தது.
அதன்படி டாக்டா் எஸ்.வினீத், மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இணை இயக்குநா் (சட்டம்) டாக்டா் மீனாட்சி சுந்தரி, இணை இயக்குநா்கள் டாக்டா் ராஜ்மோகன், கே.மாரிமுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் சீத்தாராமன் ஆகியோா் அடங்கிய குழு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதாா் மருத்துவமனையில் விரிவான விசாரணை மேற்கொண்டனா். முதல் கட்ட விசாரணை அறிக்கையை அக்குழுவினா் அரசுக்கு சமா்ப்பித்துள்ளனா்.
அதன் அடிப்படையில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிதாா் மருத்துவமனைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.