TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பள...
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரிடம் விசாரணை தொடக்கம்
திருவள்ளூா் அருகே சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான பெண்ணின் தந்தை உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் பாதுகாப்புடன் விசாரணையை தொடங்கினா்.
திருவள்ளூா் அருகே திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சோ்ந்தவா் தனுஷ். தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் விஜயஸ்ரீ. இவா்களின் காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பியை கடத்தியது தொடா்பாக திருவாலங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக விஜயஸ்ரீயின் தந்தை வனராஜா, அவரது உறவினா்கள் மணிகண்டன், கணேசன், பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் காவலா் மகேஸ்வரி, பூந்தமல்லி குத்தம்பாக்கம் வழக்குரைஞா் சரத்குமாா் ஆகிய 5 பேரை கடந்த மாதம் 13-ஆம் தேதி திருவாலங்காடு போலீஸாா் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினரான பூவை ஜெகன் மூா்த்தி, காவல் துறை ஏடிஜிபி ஜெயராம் ஆகியோா் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனவே முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, ஏடிஜிபி-ஐ கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பூவை ஜெகன் மூா்த்திக்கு கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.
இந்த சூழலில், புழல் மத்திய சிறையில் உள்ள வனராஜா உள்பட 5 பேரை, 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஏற்கெனவே சிபிசிஐடி போலீஸாா் திருவள்ளூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம்-1 இல் மனுதாக்கல் செய்தனா். அந்த மனு செவ்வாய்க்கிழமை திருவள்ளூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனராஜா, மகேஸ்வரி உள்ளிட்ட 5 பேரை புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 2 நாள் காவலில் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளா் சுரேஷ் பாண்டியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணை தொடங்கியது.