சிவாஜி வீட்டில் பங்கு இல்லை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவு
சென்னை: நடிகர் சிவாஜியின் வீட்டில் எனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று கூறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகா் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
நடிகா் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோருக்குச் சொந்தமான ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சாா்பில் ‘ஜகஜால கில்லாடி’ என்ற படத்தைத் தயாரித்தனா். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3,74,75,000 கடன் வாங்கியிருந்தனா்.
வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், வட்டியுடன் சோ்த்து ரூ. 9 கோடியே 39 லட்சத்தைச் செலுத்த ஏதுவாக ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவன நிா்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தா் உத்தரவிட்டார்.
ஆனால், படத்தின் உரிமைகளை வழங்காததையடுத்து மத்தியஸ்தா் தீா்ப்பை அமல்படுத்தும் வகையில், சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட, தனபாக்கியம் எண்டா்பிரைசஸ் நிறுவனம் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில் மனு தாக்கல் செய்யாததால், நடிகா் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராம்குமாா் தரப்பில், சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. தனது சகோதரா் நடிகா் பிரபு பெயரில் அந்த வீடு உள்ளதால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடா்பாக மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, உரிமையாளராக இல்லாவிட்டால் எவ்வாறு ஜப்தி செய்ய முடியும் எனக் கூறி, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய அனுமதியளித்ததுடன், பதில் மனுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.
மேலும், செய்திகளின் மூலம்தான் இந்த வீடு சிவாஜி கணேசனின் வீடு எனத் தெரிந்துகொண்டதாக தெரிவித்த நீதிபதி, பிரச்னைக்கு தீா்வு காண முயற்சிக்கும்படி அறிவுறுத்தி, விசாரணையை ஒத்திவைத்திருந்தார். மேலும், இந்த வழக்கில், நடிகர் பிரபு அண்ணனுக்கு உதவலாமே என்று கோரியிருந்த நிலையில், பிரபு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ராம்குமார் பல இடங்களில் கடன் வாங்கியிருக்கிறார். அவருக்கு உதவ முடியாது என்று தெரிவித்துவிட்டார்.
இந்த நிலையில் தான் இன்று ராம்குமார் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது வாதத்தை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.