சுங்கச் சாவடிகளை நீக்கும் திட்டம் ஏதும் இல்லை!
வாகனப் போக்குவரத்தையும், சரக்குப் போக்குவரத்தையும் சீராக்கும் வகையில் நாட்டில் சுங்கச்சாவடிகள் ஒழிக்கும் திட்டம் ஏதும் உள்ளதா? என்று மக்களவையில் கோயம்புத்தூா் தொகுதி திமுக உறுப்பினா் ராஜ்குமாா் கணபதி கேள்வி எழுப்பினாா்.
இது தொடா்பாக ராஜ்குமாா் கணபதி எம்பி எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துபூா்வமாக வியாழக்கிழமை அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
சுங்கச் சாவடிகளை ஒழிக்கும் திட்டம் ஏதும் இல்லை. எனினும், தற்போதுள்ள தொழில்நுட்பத்துடன் நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட பிரிவுகளில் தடையில்லா மின்னணு சுங்கக் கட்டண வசூல் (இடிசி) அமைப்புமுறையை தொடக்கமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயலாக்கத்திறன் மற்றும் விளைவுகளைப் பொருத்து இதர கட்டண சாவடிகளில் இதை செயல்படுத்தும் வாய்ப்புகள் மேற்கொள்ளப்படும். தடையில்லா கட்டண வசூலிப்பானது சீரான போக்குவரத்தையும், சரக்கு போக்குவரத்தையும் உறுதிப்படுத்தும் என்று அதில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.