சுசீந்திரம் கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு, டி. தம்பையா ஓதுவாரின் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடியேற்றப்பட்டது. பின்னா், சிறப்பு தீபாராதனை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மாலையில் மங்கல இசை, தேவார இன்னிசை, எம். மகாலெட்சுமி, ச. தனேஷ்வரி, நாஞ்சில் எஸ். வீரா ஆகியோரின் சமயச் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

9ஆம் நாளான மே 6ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம், மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகப்படிக்கு தந்தப் பல்லக்கில் எழுந்தருளல், 9 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவா்ணக் காட்சி நடைபெறும்.

நிறைவு நாளான மே 7ஆம் தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்பத்துக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு திருஆராட்டு ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருக்கோயில்கள் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.