சுதந்திரத்தைப் பாதுகாத்த நமது தியாகிகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்: பிரியங்கா
தியாகிகள் செய்த தியாகங்கள் இன்று நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்தார்.
மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள பிரியங்கா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அந்தவகையில், காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது உயிரிழந்த ராணுவ வீரர் தலச்சிர ஜனீஷின் நினைவாக எடவகா பஞ்சாயத்தில் கட்டப்பட்ட ஸ்மிருதி மண்டபம் திறப்பு விழாவில் பிரியங்கா உரையாற்றினார்.
நாட்டிற்காக குடும்பத்தில் உறுப்பினர்களில் ஒருவர் உயிர்த்தியாகம் செய்யும்போது, அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகத்தின் ஆதரவிலிருந்து ஆறுதல் கிடைப்பதோடு, உங்களைச் சுற்றியுள்ள மக்களிடமிருந்தும் நினைவில் கொள்ள விரும்புபவர்களிடமிருந்தும் அன்பைப் பெறுகிறீர்கள்.
20 வயதில் ராணுவத்தில் சேர்ந்த தலச்சிரா ஜனீஷ், 2003-ஆம் ஆண்டு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்தார், அவருக்கு 2004ஆம் ஆண்டு மரணத்திற்குப் பின் சேனா பதக்கம் வழங்கப்பட்டது. 22 ஆண்டுகளுக்குப் பிறகும், அவரது தாயார் கண்களில் இன்னும் கண்ணீர் வடிக்கிறது. ஏனென்றால் அவர் இழந்ததை நாம் ஒருபோதும் திருப்பித் தர முடியாது.
ஒரு தியாகியின் தாயாகவும் மகளாகவும், அவரது வலியின் ஆழத்தை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். நமது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை பெரும் விலை கொடுத்துப் பெறப்பட்டவை, துணிச்சலான வீரர்களின் தியாகங்களால் சாத்தியமானவை என்பதை நினைவூட்டுவதற்கு இதுபோன்ற நினைவுச்சின்னங்கள் முக்கியம் என்று அவர் கூறினார்.
மகாத்மா காந்தி சுதந்திரம் பற்றிப் பேசும்போது ஒவ்வொரு இந்தியரின் சுதந்திரத்தைப் பற்றியும் பேசினார். வலுவான, துடிப்பான மற்றும் பயனுள்ள பஞ்சாயத்து அமைப்பு அவரது கனவு. எனது தந்தை ராஜீவ் காந்தி தனது பதவிக் காலத்தில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை நிறைவேற்றியபோது நிறைவேற்ற முயன்ற ஒரு கனவு அது என்றும் அவர் கூறினார்.
கேரளத்தில் உள்ள பஞ்சாயத்துகள் முழு இந்தியாவிற்கும் ஒரு எடுத்துக்காட்டு. குப்பை இல்லாத பஞ்சாயத்தாக அறிவிக்கப்பட்ட எடவகா பஞ்சாயத்தை அவர் பாராட்டினார். இது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார்.