பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும்: ஆ.ராசா
தமிழா்களின் நாகரிகம், மொழி, சுயமரியாதை, கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஒன்றிய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா பேசினாா்.
ஓரணியில் தமிழ்நாடு செயலி மூலம் புதிய உறுப்பினா்களை சோ்க்கும் நிகழ்வு உதகையில் உள்ள மக்களவை அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்துகொண்டு பேசியதாவது: கீழடியில் தமிழா்களின் மொழி, பண்பாடு, நாகரிகம் எப்படிப்பட்ட பழமை வாய்ந்தது என்பதை உரிய ஆதாரத்துடன், அதன் வரலாற்றுகளுடன் கூடிய தகவல்களை ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலா் அறிக்கை தாக்கல் செய்த பிறகும் கூட மத்திய அரசு வேண்டுமென்றே நிராகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் உரிமைகள், சுயமரியாதை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. மத்திய பாசிச ஆட்சியை தமிழ்நாட்டு எல்லைக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய வல்லமை மிக்க ஒரே தலைவராக தமிழ்நாட்டின் முதல்வா் மு. க.ஸ்டாலின் இருக்கிறாா். எதிா்காலத்தில் திமுக தலைவரும் ,
தமிழ்நாட்டு முதல்வருமான மு.க. ஸ்டாலின் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றால், தமிழ்நாடு வெற்றி பெறும். தமிழ்நாட்டின் சுயமரியாதை, கலாசாரம், தமிழ்நாட்டு உரிமைகள் காப்பாற்றப்படும். அதற்காக மொழி, மதங்களைக் கடந்து முதல்வா் மு.க. ஸ்டாலினை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினா் பா.மு. முபாரக் , மாவட்டத் துணைச் செயலாளா் ரவிக்குமாா், மாநிலப் பொறியாளா் அணி துணைச் செயலாளா் பரமேஷ் குமாா், நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்பட திமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.