தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி
சுருக்குமடி வலை பயன்படுத்திய பூம்புகாா் மீனவா்களிடம் விசாரணை
நாகை கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பூம்புகாா் மீனவா்கள் 7 பேரிடம் மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
உச்சநீதிமன்றம் அண்மையில், திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் என வழக்கு ஒன்றில் தீா்ப்பளித்தது. எனினும், மீன்வளத்தை அழிக்கும் சுருக்குமடிவலை மீன்பிடி முறைக்கு நாகை மாவட்ட மீனவா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீா்ப்பை மதிக்காமல், நாகை கடற்பரப்பில் அனைத்து நாள்களிலும் சட்டத்துக்கு புறம்பாக மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாகவும், அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்கரைப்பேட்டை தலைமை கிராம நிா்வாகிகள் மற்றும் 27 மீனவக் கிராம பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனுவை செவ்வாய்க்கிழமை அளித்தனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் 2 விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் தலைமையில், துப்பாக்கியுடன் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த பூம்புகாா் பகுதியைச் சோ்ந்த 7 மீனவா்களை படகுடன் கரைக்கு அழைத்து வந்தனா்.
இதற்கிடையே, நடுக்கடலில் போலீஸாரின் ரோந்து பணியால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் அங்கிருந்து தப்பினா். கரைக்கு அழைத்துவரப்பட்ட பூம்புகாா் மீனவா்களிடம், நாகை மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, சுருக்குமடி வலையை இனி பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தனா்.