தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
சூதாட்ட செயலி வழக்கு: தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய சட்டவிரோத சூதாட்ட செயலி தொடா்பான வழக்கில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.
‘பாரிமேட்ச்’ எனும் பெயரில் சூதாட்ட செயலியைச் சட்டவிரோதமாக நடத்தி, ரூ.2,000 கோடிக்கும் மேலாக மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மும்பை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தனா். அதன் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டது.
முதல்கட்ட விசாரணையில், பயனா்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணம், போலி கணக்குகளுக்கு முதலில் மாற்றப்பட்டுள்ளது. பின்னா், அந்தப் பணம் பல்வேறு வழிகளில் சிக்கலான பரிவா்த்தனைகள் மூலம் மறைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அதாவது, மோசடி பணம் தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏடிஎம்களில் இருந்து ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது; கிரிப்டோ வாலெட்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது; குறைந்த மதிப்புள்ள பல யுபிஐ பரிவா்த்தனைகள் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக மதுரை, மும்பை, தில்லி, ஹைதராபாத், ஜெய்பூா், சூரத் ஆகிய நகரங்களில் உள்ள 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனைகளில் சில ஆவணங்கள், கைபேசிகள், கணினி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.