சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி!
சென்னை: சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் செவ்வாய்க்கிழமை காலை பலியானார்.
சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகர் முதலாவது தெருவில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண், இன்று காலை நடைப்பயிற்சி சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் சரியாக மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த அந்த பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சூளைமேடு காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கேகே நகர் சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மழைநீர் வடிகால் பணி முழுமையாக நிறைவடையாமல் இருந்ததால், தற்காலிகமாக வடிகாலை மூடிவைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பலியான பெண் குறித்த தகவலைக் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.