J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இ...
சென்னை: கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி - சிறைக்கு சென்ற பின்னணி
சென்னை, கொளத்தூர், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் காதர் பாஷா (42). இவரின் மனைவி நிலவர் நிஷா. கடந்த 10.04.2025-ம் தேதி அதிகாலை காதர் பாஷா தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துவழிவிட்டான் என்பவரின் வீட்டு கதவைத் தட்டினார். கதவை திறந்து பார்த்தபோது தீக்காயங்களுடன் காதர் பாஷா, துடித்துக் கொண்டிருந்தார். உடனே காதர் பாஷாவிடம் முத்துவழிவிட்டான் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார். அப்போது காதர் பாஷா, நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது என்னுடைய மனைவி நிலவர் நிஷா, கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிவிட்டார் என பதற்றத்துடன் கூறியிருக்கிறார். இதையடுத்து காதர் பாஷாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் காதர் பாஷாவிடமும் அவரை மருத்துவமனையில் சேர்த்த முத்துவழிவிட்டானிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்த போலீஸார், காதர் பாஷாவின் மனைவி நிலவர் நிஷாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், `தினமும் குடித்துவிட்டு சொல்ல முடியாத தொல்லைகளை காதர் பாஷா செய்து வந்தார். அவரால் வீட்டில் நிம்மதியில்லை. சம்பவத்தன்றும் மதுபோதையில் என்னிடம் காதர்பாஷா தகராறு செய்தார். பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார். அவர் உயிரோடு இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது எனக் கருதி வீட்டிலிருந்த எண்ணெய்யை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தேன். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த என் கணவர் மீது எண்ணெய்யை ஊற்றினேன்’ என்று கூறினார். அதனால் காதர் பாஷாவின் மனைவி நிலவர் நிஷாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கணவரின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி அவரை மனைவியே கொலை முயற்சி செய்த சம்பவம் புழல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.