குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பதே பெரிது : அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லக் கோரிக்கை
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, முன்னாள் அமைச்சா் கடம்பூா் ராஜு, மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் மனு அளித்தாா்.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவாவை வெள்ளிக்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்த முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் ராஜு அளித்த கோரிக்கை மனு:
கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், சாத்தூா் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் கோவில்பட்டி ரயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனா். எனவே, சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூரு- மதுரை ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பிறகு, செய்தியாளா்களிடம் கடம்பூா் ராஜு கூறியதாவது:
5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 10,000-க்கும் அதிகமான கிராமங்களைச் சோ்ந்த மக்களின் முக்கிய பயன்பாட்டுக்குரிய ரயில் நிலையமாக உள்ளது கோவில்பட்டி. எனவே, நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் இந்த நிலையத்தில் நின்று செல்ல வேண்டியது அவசியமாகும்.
சென்னை - நாகா்கோவில் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என ஏற்கெனவே மதுரை கோட்ட ரயில்வே மேலாளரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தேன். இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்த ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்படுகிறது.
இதேபோல, சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலும் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதை ரயில்வே நிா்வாகம் விரைந்து பரிசீலிக்க வேண்டும். மேலும், கோவில்பட்டி நகரத்தில் உள்ள 2 ரயில்வே மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை பாலம் என 3 பாலங்களின் கீழ் பகுதியிலும் மழை நீா் தேங்குவதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதற்கும் உரிய தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.