செயற்கை இழை ஓடுதளம்: அண்ணா விளையாட்டு மைதானம் அளவீடும் பணி!
கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை தடகள ஓடுதளம் அமைப்பதற்காக மைதானம் அளவீடும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
மஞ்சக்குப்பத்தில் சுமாா் 23.23 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், இறகுப்பந்து, ஓடு தளம், நீச்சல் குளம் என பல்வேறு ஆடுகளங்கள் உள்ளன.
இங்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான வீரா்கள், வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுதவிர நூற்றுக்கணக்கானோா் காலை, மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.
இதனிடையே, கடந்த நவ.25-ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற விழாவின்போது, அண்ணா விளையாட்டு மைதானத்தில் ரூ.15.08 கோடியில் செயற்கை இழை தடகள ஓடுதளம் அமைக்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
இந்த நிலையில், செயற்கை இழை தடகள ஓடுதளம் அமைப்பதற்காக அண்ணா விளையாட்டு மைதானத்தை அளவீடு செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.