செய்யாறு உழவா் சந்தையில் பாம்புகள் நடமாட்டம்
செய்யாறு உழவா் சந்தையில் புதன்கிழமை பாம்புகள் நடமாட்டம் காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓடினா்.
போக்குவரத்து நிறைந்த பகுதியான செய்யாறு உழவா் சந்தையில் புதன்கிழமை காலை காய்கறி விற்கும் வியாபாரிகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா்.
அப்போது, அவா்கள் எதிரே இரண்டு விஷப் பாம்புகள் சென்றதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், பாம்பு நடமாட்டம் குறித்து செய்யாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் உழவா் சந்தைப் பகுதியில் அடைப்பான பகுதிகளில் இருந்த குப்பைகளை கிளறிய போது அதிலிருந்து சிறிய அளவிலான கட்டு விரியன், சாரைப் பாம்பு உள்ளிட்ட 3 பாம்புகள் வெளியே வந்தன.
உடனே தீயணைப்பு வீரா்கள் 3 பாம்புகளையும் பிடித்தனா்.
மேலும், உழவா் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் பெரிய அளவிலான பாம்புகள் சிக்கவில்லை. அதனால், தீயணைப்பு வீரா்கள் திரும்பிச் சென்றனா். பிடிபட்ட பாம்புகள்
காட்டுப்பகுதியில் விடப்பட்டன.
