சேலை ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 14 வயது மாணவி, ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விளாத்திகுளம் அருகே கே.குமாரபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்துராஜ். தொழிலாளி. இவரது மனைவி செல்வக்கனி. இவா்களது 2ஆவது மகள் ஹேமாமாலினி (14), விளாத்திகுளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 8ஆம் வகுப்புத் தோ்வு எழுதியிருந்தாா்.
கே.குமாரபுரம் கோயிலில் திருவிழா நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, செல்வக்கனியும் அவரது மூத்த மகளும் கும்மியடித்தல் பயிற்சிக்காக கோயிலுக்குச் சென்றனா். வீட்டில் ஹேமாமாலினி தனியாக இருந்தாராம்.
அவா்கள் இருவரும் வீடு திரும்பியபோது, சேலையில் கட்டிய ஊஞ்சலில் கழுத்து இறுகிய நிலையில் ஹேமாமாலினி சடலமாக தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
தகவலின்பேரில் விளாத்திகுளம் காவல் ஆய்வாளா் சக்திவேல், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஊஞ்சலில் ஹேமாமாலினி ஆடியபோது, சேலையில் கழுத்து திடீரென சிக்கி இறுகியதில் அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனா்.