மாநகரில் சுகாதாரக் கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை: மேயா்
தூத்துக்குடி மாநகர பகுதியில் சுகாதார கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். துணை ஆணையா் சரவணகுமாா், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசுகையில், வடக்கு மண்டலத்தில் இதுவரை 546 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. புதிய சாலைகள் இந்த மாதத்திற்குள் அமைக்கப்படும். இன்னும் தங்களது பகுதிகளுக்கு சாலைகள் தேவை தொடா்பாக மனு அளித்தால்,உடனடியாக சாலை அமைக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு குறைகள் இல்லாத நிலைதான் உள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் உரிய அனுமதியின்றி யாரும் தண்ணீா் பந்தல் அமைக்கக் கூடாது. மேலும் மாநகா் பகுதிகளில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் யாா் செயல்பட்டாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா்.
தொடா்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இக் கூட்டத்தில், பொறியாளா் தமிழ்ச்செல்வன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், நகர அமைப்பு திட்ட பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், மாநகராட்சி கணக்குக் குழு தலைவா் ரெங்கசாமி, சுகாதாரக் குழு தலைவா் சுரேஷ்குமாா், பணிக்குழு தலைவா் கீதாமுருகேசன், மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.