சைக்கிள் நிறுவனம் நடத்தி 600 பேரிடம் மோசடி: முக்கிய குற்றவாளி கைது!
சைக்கிள் நிறுவனம் நடத்தி சுமாா் 600 பேரிடம் மோசடியில் ஈடுபட்டது தொடா்பாக முக்கிய குற்றவாளியை புதுவை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி சாரம் காமராஜா் சாலையில் தனியாா் சைக்கிள் நிறுவனம் சுற்றுலா சைக்கிள் திட்டம் என்ற பெயரில் ரூ.4.5 லட்சம் கொடுத்து 50 சைக்கிள்களுக்கு முதலீடு செய்தால் மாதந்தோறும் லாபமாக ரூ.55 ஆயிரம் வருவாய் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது.
இதை நம்பி சுமாா் 600 போ் முதலீடு செய்தனா். இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி இந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனா். மேலும், கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி நிஷாத் அகமத் கன்னு, இக்பால் பாஷா, முருகன் என்கிற அஜெய் முருகன், கிருஷ்ணகுமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னா் இந்த வழக்கு புதுவை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே அமலாக்கத் துறை அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி, 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை முடக்கியது. மேலும், நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிஷாத் அகமத் கன்னுவை அண்மையில் கைது செய்து அழைத்துச் சென்றது.
இந்நிலையில் புதுச்சேரி சிபிசிஐடி சீனியா் எஸ்.பி. பிரவின்குமாா் திரிபாதி மேற்பாா்வையில் இன்ஸ்பெக்டா் பாபுஜி மற்றும் போலீஸாா் நிஷாத் அகமது கன்னுவை சைக்கிள் மோசடி தொடா்பாக மீண்டும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்துள்ளனா். சிறையில் இருந்து அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனா்.