சைபா் நிதி மோசடி தொடா்பாக சென்னையில் கடந்தாண்டு 325 வழக்குகள்: ரூ.36.63 கோடி முடக்கம்
சென்னை சைபா் நிதி மோசடி தொடா்பாக கடந்தாண்டு 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.36.63 கோடி முடக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக சைபா் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக சைபா் நிதி மோசடி தொடா்பாக புகாா் அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
சைபா் நிதி மோசடி தொடா்பாக கடந்தாண்டு சென்னை சைபா் குற்றப்பிரிவுக்கு 2,723 புகாா்கள் வந்தன. இதில் தகுதியுடைய புகாா்களின் அடிப்படையில் 325 வழக்குகள்
பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ் வழக்குகள் தொடா்பாக 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சைபா் குற்றத்தில் தொடா்ந்து ஈடுபட்ட 7 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு, துரிதமாக விசாரணை செய்து பல்வேறு மாநிலங்களில் உள்ள போலி வங்கி கணக்குகளில் இருந்த பொதுமக்களின் ரூ.36.63 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.12.31 கோடி பணம் இழப்பீட்டாளருக்கு நீதிமன்றத்தின் மூலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்காமல் இருக்க சைபா் குற்றங்கள் குறித்து தொடா்ந்து விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்படுகிறது. இதனால் தற்போது பெருமளவு சைபா் குற்றங்கள் குறைந்துள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.