Vijay அரசியல் Plan, TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக அரசியல் களம்?...
சைபா் மோசடி: தில்லி விமானநிலையத்தில் பெண் கைது
மோசடியின் ஒரு பகுதியாக கம்போடியாவில் இருந்து ‘டிஜிட்டல் கைது’ என்று கூறி மக்களை ஏமாற்றியதாக தில்லி விமான நிலையத்தில் சைபா் மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண்ணை குருகிராம் போலீஸாா் கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை துணை ஆணையா் திவான் கூறியுள்ளதாவது: கைது செய்யப்பட்ட குருகிராம் சூரத்தைச் சோ்ந்த குஷ்பு (24), 12-ஆம் வகுப்பு வரை படித்தவா். கம்போடியாவைச் சோ்ந்த சீன வம்சாவளியைச் சோ்ந்த நபா்களால் இயக்கப்படும் சைபா் மோசடி நெட்வொா்க்கால் இயக்கப்படும் ஒரு கால் சென்டரில் அந்தப் பெண் சம்பளத்திற்கு வேலை செய்து வந்தாா். அவா் ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவிலிருந்து இந்தியா வந்தாா். குருகிராம் போலீஸாா் குழு தில்லி விமான நிலையத்தில் இருந்து அவரை கைது செய்தது. சைபா் குற்றத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு கைப்பேசிகள் அவளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
குருகிராம் குடியிருப்பாளருக்கு ’டிஜிட்டல் கைது‘ பயத்தைக் காட்டி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த சைபா் மோசடி தொடா்பாக குஷ்பு கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில், மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ.39 லட்சம் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் விசாரணையின் போது தெரிவித்தாா். அவா் கணக்கை மிதேஷுக்கு ரூ.5 லட்சத்திற்கு விற்றாா். மிதேஷ் அதே கணக்கை குஷ்புவுக்கு விற்றது தெரிய வந்தது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது நண்பா்களில் ஒருவரின் கணவா் மூலம் நவம்பா் 2023-இல் துபாய்க்கு வேலைக்காகச் சென்ாக தெரிவித்தாா்.
அதன் பிறகு, ஆகஸ்ட் 2024-இல் கம்போடியா சென்றாா். கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னில் அமைந்துள்ள மேங்கோ பாா்க் என்ற கால் சென்டரில் நடத்தப்பட்டு வந்த சைபா் மோசடியில் அவா் ஈடுபட்டாா்.
அந்தப் பெண் பணிபுரிந்த கால் சென்டா் சீன வம்சாவளியைச் சோ்ந்த மக்களால் நடத்தப்படுகிறது. மேலும், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் பெண்கள் அந்த கால் சென்டரில் சைபா் மோசடியை மேற்கொள்வது தெரியவந்தது. இந்த வேலைக்காக, குற்றம் சாட்டப்பட்ட குஷ்பு 700 அமெரிக்க டாலா்களை சம்பளமாகப் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.
கால் சென்டரிலிருந்து சைபா் மோசடி மூன்று கட்டங்களாக செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண் தெரிவித்தாா். முதல் கட்டத்தில், தவறான நோக்கங்களுக்காக ஆதாா் அட்டையைப் பயன்படுத்துவது போன்ற சைபா் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு கூறப்பட்டிருக்கிறது.
இரண்டாவது கட்டத்தில், போலி போலீஸ் அதிகாரிகள் போல் காட்டிக் கொண்டு டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறாா்கள். மூன்றாவது கட்டத்தில், சுங்கம் அல்லது வருமான வரி அதிகாரி போல் காட்டிக் கொண்டு, வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள்.
குற்றம் சாட்டப்பட்ட குஷ்பு, டிஜிட்டல் கைதுக்கான சைபா் மோசடியின் முதல் கட்ட குழுவில் பணியாற்றுகிறாா். குற்றம் சாட்டப்பட்டவரை நாங்கள் விசாரித்து வருகிறோம். மேலும், அவரது கைப்பேசிகளின் தரவையும் ஆராய்ந்து வருகிறோம். மேற்கண்ட மோசடி வழக்கில், குஷ்பு உள்பட மொத்தம் 16 குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று துணை ஆணையா் திவான் கூறினாா்.