சொத்துப் பிரச்னையில் மூத்த மகன் வெட்டிக்கொலை! தந்தை சரண், இளைய மகன் தலைமறைவு!
மன்னார்குடி அருகே சொத்துப் பிரச்னை காரணமாக மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த சேரி பிரதான சாலையைச் சேர்ந்தவர் பாலு என்கிற சி.பாலகிருஷ்ணன்(58). இவரது மனைவி பவானி(52). இவர்களுக்கு அரவிந்த் மோகன்(32), அருண் மோகன்(30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் பாலகிருஷ்ணன், அருண் மோகன் குடும்பத்தினரும், முதல் தளத்தில் அரவிந்த் மோகன் மற்றும் அவரது மனைவி ஜெயப்ரீத்தா, 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.
ஓராண்டுக்கு முன்னர், பாலகிருஷ்ணன் குடும்பத்தில் பாகப் பிரிவினை நடைபெற்றது.இதில் மூத்தமகன் அரவிந்த் மோகனுக்கும் அவரது தந்தை பாலகிருஷ்ணனுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை (மே 7) இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தினர். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்ப்பட்டதையடுத்து, மறுநாள் பேசிக்கொள்ளலாம் என கூறி சென்று விட்டனர்.
இந்நிலையில், பெற்றோரிடம் பேசிவிட்டு வருவதாக மனைவி ஜெயப்ரீத்தாவிடம் அருண்மோகன் கூறிவிட்டு, மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து பேசிக்கொண்டிருந்த போது, பாலகிருஷ்ணனும், அருண்மோகன் இருவரும் சேர்ந்து அரவிந்த் மோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
அப்போது, சத்தம் கேட்டு அங்குவந்த தாயார் பவானி, ஜெய ப்ரீத்தா இருவரும் தடுக்க முயன்றதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்து மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில்,அரவிந்த்மோகனை மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இது குறித்து, கோட்டூர் காவல்நிலையத்தில் ஜெயப்ரீத்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மேல்விசாரணை செய்து வரும் நிலையில், திருத்துறைப்பூண்டி நடுவர் நீதி மன்றத்தில் வியாழக்கிழமை காலை பாலகிருஷ்ணன் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள அருண் மோகனை, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சொத்துப் பிரச்னைக்காக மூத்த மகனை இளைய மகனுடன் சேர்ந்து தந்தை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:பிளஸ் 2: தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி தேர்ச்சி!