செய்திகள் :

சொல்லப் போனால்... யார் அகதி? எது தர்ம சத்திரம்?

post image

‘உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல’ என்று இலங்கைத் தமிழர் தொடர்பான தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சுபாஷ்கரன் என்பவர், 2015-ல் கைது செய்யப்பட்டு, 2018-ல் ராமநாதபுரம் விசாரணை நீதிமன்றம் பத்தாண்டு சிறைத்தண்டனை விதித்த நிலையில், மேல் முறையீட்டில் 2022-ல் 7 ஆண்டுகளாகத் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் குறைத்தது. மேலும், தண்டனை முடிந்ததும் இந்தியாவில் இருக்கக் கூடாது; இலங்கை திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தண்டனைக் காலம் முடிவடையவுள்ள நிலையில், சுபாஷ்கரனை நாடு கடத்தாமல் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதி கேட்டுத் தமிழ்நாடு அரசிடம் அவருடைய மனைவி விண்ணப்பித்தார்; அரசு பதிலளிக்கவில்லை. தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த சுபாஷ்கரன், மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்ட நிலையில், தன்னையும் இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, கே. வினோத்சந்திரன் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வோ மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது.

கூடவே... “உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கெனவே, நாங்கள் 140 கோடி மக்கள்தொகையுடன் போராடி வருகிறோம். அனைத்து நாடுகளிலுமிருந்து வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்குச் சென்று அடைக்கலம் கோருங்கள்” என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, வழக்கு தொடர்பான சுபாஷ்கரனை  மட்டுமல்ல; தாண்டி ஒட்டுமொத்த தமிழர்களையுமே புறந்தள்ளுவதாகவும்  நிராகரிப்பதாகவும் இருப்பதாகத் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் மட்டுமின்றிப் புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

இனக் கலகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், 1980-களில் தொடங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் தமிழ்நாட்டை நோக்கியும் தமிழ்நாட்டின் வழியாக உலகின் பிற நாடுகளை நோக்கியும் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வெளியேறினர்; வெளிநாடுகளுக்குச் செல்வதற்குச் செலவிட முடியாத நிலையிலிருந்த, பெரும்பாலும் ஏழைகள், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த சில லட்சம் பேர், தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டனர்.

பிற நாடுகளைவிடவும் ஒரே மொழி, ஒரே பண்பாடு மட்டுமல்ல, தாயான தமிழகம், நாமெல்லாம் தமிழர்கள் என்ற உணர்வும் நம்பிக்கையும் இவர்களைப் பாதுகாப்பு எனக் கருத வைத்துவிட்டது – அதுவே ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்துத் துயரங்களுக்கும்கூட காரணமாகியும் விட்டது!

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு மூலையில் யாரோ சிலர் ஏதோவொரு காரணத்துக்காகத் தங்கள் வாழிடத்தைத் துறந்து வெளியேறிக்கொண்டுதான் இருக்கின்றனர். பெருமெடுப்பிலான பல  வெளியேற்றங்களுக்கான முதன்மைக் காரணங்கள் – ஆயுதப் போராட்டங்கள்,  சண்டைகள், வன்முறைகள்.

இடைவிடா போர்கள், இன அடிப்படையிலான மோதல்கள், மத அடிப்படையிலான அச்சுறுத்தல்கள், விடுதலைப் போராட்டங்கள், பசி, பஞ்சம், பட்டினி, பாலியல்ரீதியிலான வன்கொடுமைகள், சில தருணங்களில் வாழமுடியா பேரழிவுகள் என இன்னும் எத்தனையோ காரணங்கள்.

முற்றிலும் ஏலாத நிலையில் பெரும்பாலும் தங்கள் நாட்டையொட்டியுள்ள, வாய்ப்புக் கிடைத்தால் சற்றுத் தொலைவில் இருக்கும் ஏதேதோ நாடுகளைத் தேடி ஏதிலிகளாக – அகதிகளாக, கொஞ்சமும் விருப்பமின்றி, உயிர் பிழைத்தால் போதும், தங்கள் குடும்பங்களைக் காக்க முடிந்தால் போதும் என்றுதான், வேரோடும் வேரடி மண்ணோடும் எல்லாவற்றையும் பறித்தெடுத்துக்கொண்டு மக்கள் வெளியேறுகின்றனர்.

உலகம் முழுவதும் 6.33 கோடி மக்கள் தங்கள் வாழிடங்களைவிட்டு இடம் பெயர்ந்து வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் 4.34 கோடி பேர் அகதிகள் என்ற நிலையில் இருக்கின்றனர். நாடற்றவர்கள் அல்லது நாடற்றவராகும் ஆபத்தில் இருப்பவர்கள் 44 லட்சம். 2023-ல் உலகம் முழுவதும் பிற நாடுகளில் தஞ்சம் கேட்டிருப்பவர்கள் எண்ணிக்கை 36 லட்சம்.

அகதிகள், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் 73 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தான், சிரியா, வெனிசுவேலா, உக்ரைன், சூடான் ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மூன்றிலொரு பங்கு அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள்தான் மறுவாழ்வு  அளிக்கின்றன.

உலகிலேயே ஈரானில்தான் மிக அதிகளவிலான அகதிகள் தஞ்சமடைந்து வாழ்கின்றனர் / வாழ வைக்கப்படுகின்றனர் – 37.6 லட்சம் பேர் (பெரும்பாலும் ஆப்கானியர்கள்). அடுத்தடுத்து, துருக்கி (36 லட்சம்), ஜெர்மனி, உகாண்டா, பாகிஸ்தான், சாட், ரஷியா, எத்தியோப்பியா, வங்கதேசம், போலந்து ஆகிய நாடுகள் இடம் பெறுகின்றன.

உள்நாட்டுக் கலகம், அமைதியின்மை காரணமாக சூடானிலிருந்து அருகிலுள்ள நாடுகளுக்கு வெளியேறியோர் மட்டும் 12 லட்சம். ஆப்கானிஸ்தானிலிருந்து அல்லது சிரியாவிலிருந்து வெளியேறியவர்கள் 1.28 கோடி பேர்! அகதிகளில் 75 சதவிகிதத்தினர் வறிய அல்லது நடுத்தர வருமானமுள்ள நாடுகளில்தான் இருக்கின்றனர் (இந்தியா எந்தப் பிரிவில் வருகிறதெனத் தெரியவில்லை).

மியான்மரில் நாடற்றவர்களாகக் கருதப்படுவோர் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள். 2017 வன்முறைக்குப் பிறகு மியான்மரிலிருந்து 12 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியிருக்கின்றனர். இவர்களில் 90 சதவிகிதத்தினர் வங்கதேசத்திலும் மலேசியாவிலும் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மணிப்பூரில் 2023 மே 3 ஆம் தேதி தொடங்கிய வன்முறைகளைத் தொடர்ந்து, மோதிக்கொள்ளும் மெய்தி, குக்கி ஆகிய இரு இனங்களையும் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநிலத்துக்குள்ளேயே வாழிடம் பெயர்ந்து மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

அதிபர்கள், பிரதமர்கள், முதல்வர்கள், நீதிபதிகள் மட்டுமின்றிக் கஞ்சிக்கே வழியின்றிக் கஷ்டப்படும் பல நூறு கோடி ஏழைகள் உள்பட நாம் எல்லாரும் இந்த உலகத்தில்தான் – நிலப்பரப்புகள் வேறுவேறாக இருந்தாலும் – ஒன்றாகத்தான்  வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் எல்லாருக்குமே பரஸ்பரம் உயிர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு என்றொன்று இருக்கிறது.

ஏதோவொரு வகையில் நாம், இந்தியாவோ, இன்ன பிற நாடொன்றோ, நல்ல நிலைமையில் இருப்பதாகக் கொள்ளலாம். ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் நாடுகளை விட்டு அகதிகளாக வெளியேறும் மக்களைக் கண்டுகொள்ளாமல் ஒருவரால் அல்லது ஒரு நாட்டால் எப்படி இருக்க முடியும்?

உலகில் அகதிகள் பாதுகாப்புக்கென எத்தனையோ சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன; ஆனால், இவற்றைப் பின்பற்றுவதற்குத்தான் சில நேரங்களில் ஆள்களையும் நாடுகளையும் தேட வேண்டியிருக்கிறது.

பரந்து கிடக்கிறது உலகம். 1983 இனக் கலகத்தைத் தொடங்கி, இலங்கையிலிருந்து உயிருக்குப் பயந்து தமிழர்கள் வெளியேறத் தொடங்கினார்கள். தொடர்ந்தது ஆயுதப் போராட்டமும் அரச அடக்குமுறைகளும் ராணுவ நடவடிக்கைகளும். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் ஈழத் தமிழர்கள் வெளியேறினர்.

தமிழ்நாட்டின் வழியாகவும் பிற வழிகளிலும் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து போன்ற பிற ஐரோப்பிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா என எங்கெங்கோ இவர்கள் புலம்பெயர்ந்து சென்றனர். இன்றைக்குத் தமிழ்நாடு, அதாவது இந்தியா தவிர்த்துப் புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாமும் (அல்லது பெரும்பாலானவற்றில்) மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் கண்காணிப்புக்குப் பிறகு அல்லது சில வரையறைகளுக்கு உள்பட்டுக்   குடியுரிமை பெற்றுத் தற்போது அந்த நாட்டு மக்களாகவே மாறிவிட்டனர். அந்தந்த நாடுகள் அப்படியே அனைவரையும் சொந்த மக்களாக உள்வாங்கிக்கொண்டுவிட்டன. இந்த நாற்பது ஆண்டுகளில் மூன்றாம் தலைமுறை கண்டுவிட்ட இவர்களின் குழந்தைகளில் பலருக்குத் தமிழேகூட ஓரளவு பேச மட்டும்தான் தெரியும்.

ஆனால், தமிழை, தமிழர்களை நம்பித் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களின் நிலை? இன்னமும் பெரும்பாலானோர் அகதிகள் முகாமில் திறந்தவெளிச் சிறைச்சாலைக் கைதிகளைப் போலவே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 106 முகாம்கள் இருக்கின்றன. சுமார் 60 ஆயிரம் பேர் இந்த முகாம்களிலும் 30 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியேயும் (வெளிப்பதிவு) வாழ்ந்துவருகின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கணக்கு எப்போது எடுக்கப்பட்டதெனத் தெரியவில்லை. உள்ளபடியே, தமிழ்நாட்டில் அகதிகளாக 1.46 லட்சம் பேர் வாழ்ந்துவருவதாகவும் இவர்களில் கால் பங்கினர் குழந்தைகள், சிறார்கள் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1983 தொடக்கம் அலை அலையாக வந்தவர்கள் இவர்கள். இங்கே இவர்களும் மூன்றாம் தலைமுறை கண்டுவிட்டனர். ஆனால், இன்னமும் அகதிகளாகவே முகாம்களுக்குள் பத்துக்குப் பத்து சதுர வீடுகளில் (அல்லது வீடுகளைப் போன்றதொரு கட்டுமானத்தில்) வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஒரு குழந்தை அந்த நாட்டில் பிறந்தால், பிறப்பால் தானாகவே, அந்த நாட்டின் குடிமகனா(ளா)கிவிடும். ஆனால், இங்கேயோ பிறக்கும்போதே அகதிதான் (ஏதோ குறிப்பிட்ட காலகட்டத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் குடியுரிமை தந்திருப்பதாகக் கூறுகிறார்கள்).

வாராவாரம் என்பது மாறி இன்னமும் மாதந்தோறும் முகாம்களில் சோதனைகள் நடத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. ஒருவர் எங்கேயாவது வெளியூர் செல்வதாக இருந்தால் தலையாரி அல்லது கிராம நிர்வாக அலுவலரில் தொடங்கி, வட்டாட்சியர் வரையிலான முன் அனுமதி பெற வேண்டும் (கிட்டத்தட்ட அந்தக் கால குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் போல). ஊருக்கு அல்லது அருகிலுள்ள நகருக்கு யாராவது விஐபிக்கள் வந்தால் தொடர்ந்தாற்போல மூன்று நான்கு நாள்கள்கூட முகாம்களில் சோதனைகள் இருக்கும்.

இந்தக் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் பயில முடியும். ஆனாலும், மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிக்க முடியாது. கடவுச் சீட்டுகள் கிடையா. எனவே, வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது. ஒருமுறை வெளியேறினால் மீண்டும் இந்தியாவுக்குள் வர முடியாது. அகதிகளில் பலரும் சாதாரண வேலைகளில்தான் இருக்கின்றனர். நல்ல படிப்பு, நல்ல வேலை கிடைக்காத நிலையில், இவர்களில் சிலரை சமூக விரோத சக்திகள் பயன்படுத்திக்கொள்ளும்போது, பொதுப் புத்தியில்  ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவர் மீதும் பழிபோடப்படுகிறது.

[ஐக்கிய நாடுகள் அகதிகள் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன].

அகதிகளுக்காகக் குடும்ப அட்டை போன்ற வசதிகள் செய்துகொடுக்கப்பட்ட போதிலும், இன்னமும்கூட சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலும் கணிசமானோர் சிறைவைக்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர். இவற்றில் குடியுரிமை தவிர்த்த வேறு பல பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மத்திய அரசு தேவையில்லை, நினைத்தால், மாநில – தமிழ்நாட்டு அரசாலேயே – செய்துவிட முடியும். ஆனால்...

இந்தியா எவ்வளவு பேரை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது? எவ்வளவு பேரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது? சில, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அகதிகளாக வந்தவர்கள்தான் பார்ஸிக்களும் இரானியர்களும். இன்றைக்கு அவர்கள் நாடு இந்தியாதான், அவர்களும் இந்தியர்கள்தான்.

நாடு விடுதலை பெற்ற பிறகு 1959-ல் தலாய்லாமா தலைமையில் திபேத்திய அகதிகள், சுமார் 80 ஆயிரம் பேர் வெளியேறி இந்தியா வந்தனரே, கர்நாடகத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் அவர்களுக்கென நகரமே உருவாக்கிக் கொடுக்கப்பட்டதே!

1971-ல் இப்படி இந்தியாவுக்குள் வந்து குவிந்த அகதிகளுக்காகத்தான் ஒரு படையெடுப்பே நடைபெற்றது; பாகிஸ்தான் இரண்டானது, வங்க தேசம் என்றொரு நாடே உருவானது. அப்போது நாட்டின் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்திலும்கூட ஏதோவொரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அகதிகளாக மக்கள் வெளியேறிக்கொண்டுதான் இருப்பார்கள்; இருக்கிறார்கள். எவரொருவரும் அகதிகளாக  வெளியேறுவது இன்பச் சுற்றுலாவுக்காக அல்ல. அகதி வாழ்வை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும், ஒவ்வொருவருக்குமான வலி!

இத்தகைய உலகச் சூழலில், தனியொருவர் தொடர்ந்த வழக்கில், மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்ததைத் தாண்டி, எங்கேயாவது போங்கள், இங்கே வராதீர்கள், இதுவென்ன தர்ம சத்திரமா? என்றெல்லாம் உச்ச நீதிமன்றமே கருத்துத் தெரிவித்திருப்பதைக் கேட்டு, தமிழர்கள் மட்டுமல்ல, அகதி வாழ்வை நினைத்துப் பார்க்கும் அனைவருமே அதிர்ந்திருக்கிறார்கள்.

இலங்கை திரும்ப இயலாது; இங்கிருக்க அனுமதி கொடுங்கள் என்றொருவர் கேட்டிருக்கிறார். இங்கேயோ முகாம்களில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் எதிர்காலம் தெரியாமல் அகதிகளாகக் கிடக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் ஏழரைக் கோடி பேர்! ஒற்றைத் தமிழரை நிராகரிக்கும் நீதிமன்றத்தின்  கருத்தானது, எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகி, ஒட்டுமொத்த தமிழர்களை மட்டுமின்றி உலகெங்கும் வெளியேறுகிற இன்னபிற அகதிகளையும் நிராகரிப்பதாகிவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இதுபற்றி ஏனோ அரசியல் கட்சிகளின் தலைவர்களும்கூட எதிர்வினையாற்றாமல் கடக்கின்றனர்.

ஆமாம், கொப்பூழ்க் (தொப்புள்) கொடி உறவு, அரைஞாண் கொடி உறவு, அவரைக் கொடி, வெற்றிலைக் கொடி உறவு என்றெல்லாம் அவ்வப்போது கூறிக் கொண்டிருக்கிறார்களே? இவற்றுக்கெல்லாம் தமிழில் என்னதான் பொருள்?

* * *

டெயில் பீஸ்

டிரம்ப் சார், என்னதான் உங்க பிரச்சினை? ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்படுவதற்கு,  தானே காரணம் என்று எட்டாவது முறையாகத் தெரிவித்திருக்கிறார் அல்லது அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் சில நாள்கள் முன் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை அவர் சந்தித்துப் பேசியதும்கூட உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியைச் சந்தித்தது போலவே ஆகிவிட்டது. தடாலடியாக சில விடியோக்களைக் காட்டி எதிர்பாராமல் டிரம்ப் குற்றம் சாட்டவே திணறிப் போய்விட்டார் ராமபோசா (விடியோவில் நன்றாகவே தெரிகிறது!).

அப்போதுதான் டிரம்ப் சொன்னார்: “பாகிஸ்தான், இந்தியா விஷயத்தில் நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள், எல்லாவற்றையும் முடித்துவைத்துவிட்டோம், வணிகத்தின் மூலம்தான் முடித்ததாக நான் நினைக்கிறேன்.”

இது என்ன குரூப்? பிகானீர் கூட்டத்தில் பேசும்போது இந்தியா – பாகிஸ்தான் சண்டை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, என்னுடைய நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; செந்தூரம்தான் செல்கிறது என்றார்.

_ “சுதந்திர இந்தியாவில் பிறந்தவன் நான், ஜனநாயகம் என் ரத்தத்திலேயே இருக்கிறது”

_ “ஒரு குஜராத்தியாக நான் இருக்கிறபோது, வணிகம் என் ரத்தத்திலேயே இருக்கிறது”.

_ “பாரூக் அப்துல்லாவுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மதச்சார்பின்மை என்பது அரசமைப்பில் மட்டுமல்ல, நம் ரத்தத்திலேயே இருக்கிறது.”

இவையெல்லாமும்கூட பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே சொன்னவைதான். இப்போது செந்தூரத்தைச் சொன்னதும் எல்லாவற்றையும் தேடிப் பிடித்து சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிட்டார்கள் மக்கள்!.

இதையும் படிக்க.. சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

மாநிலக் கல்விக் கொள்கை மறைந்து கிடப்பது ஏன் ?

முதல் முறையாக இந்தியாவில் ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்கியது 1935 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் கால - அரசுச் சட்டம் (Government of India Act 1935). இந்தச் சட்டத்தின்படி, முக்கியமான ‘பொது நலனான’ “கல்வி... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து நேரிட்ட பதற்றமான சூழலில் இந்தியா – பாகிஸ்தான் இடையே தானும் தன்னுடைய நிர்வாகமும்தான் மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சொல்லிக் கொண்டி... மேலும் பார்க்க

பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியா் மாநாடு?

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியா் இளைஞா் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது. 12 ஆ... மேலும் பார்க்க

மற்றுமொரு மாநில சுயாட்சித் தீர்மானம் - மாற்றம் விளையுமா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்தியுள்ள ஆட்சி முறை இணையிலாத் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்பது ஒரு சிறப்பாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால், அதுவே பல நடைமுறைச் சிக்கல்களையும் அவ்வப்போது நம்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... 1965 இந்தியா – பாகிஸ்தான் போரும் இன்றும்!

வங்கதேச விடுதலை, சியாச்சின், கார்கில், துல்லிய தாக்குதல் என்றெல்லாம் அவ்வப்போது சண்டைகள் அல்லது மோதல்கள் நடந்திருந்தபோதிலும் – இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன், 1965-ல், நடந்ததுதான் இந்தியா – பாகிஸ்தான்... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!

“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடும் சமூக – பொருளாதார ஆய்வு மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தனிநபர் சொத்துரிமைக்கு எதிரானது; மாவோ கருத்தியலின் எதிரொலி. காங்கிரஸை ஆட்சி அமைக்கத் தேர... மேலும் பார்க்க