சோனியா அகர்வால் வருகை.... விறுவிறுப்படையும் கயல் தொடர்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் திடீர் திருப்பமாக நடிகை சோனியா அகர்வால், இந்தத் தொடரில் இணைந்துள்ளார்.
தந்தையை இழந்த கயல் என்ற கடின உழைப்பாளிப் பெண்ணைச் சுற்றியே இத்தொடரின் கதை நகர்கிறது. கயலுக்கு வரும் எல்லா தடைகளையும் எப்படி அவள் தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.
இந்தத் தொடர் கடந்த 2021 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. பி. செல்வம் 'கயல்' தொடரை இயக்குகிறார். 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 1100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி சாதனையைப் படைத்துள்ளது.
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில், சைத்ரா ரெட்டி, சஞ்ஜீவ், மீனாகுமாரி உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இத்தொடர் எப்போதும் டிஆர்பியில் முதல் மூன்று இடத்தில் இருக்கும். ஆனால், கயல் தொடர் நீண்ட காலமாக ஒரே மாதிரியான கதையில் சென்றுக் கொண்டிருப்பதால், ரசிகர்கள் தொடரை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தொடரின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக நடிகை சோனியா அகர்வாலை கயல் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க தொடர் குழு முடிவெடுத்துள்ள நிலையில், இந்தத் தொடரில் நடிக்கும் மூர்த்தி பாத்திரத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்தவராக சோனியா அகர்வாலின் பாத்திரத்தை தொடர் குழு உருவாக்கி உள்ளது.
சோனியா அகர்வால் வருகையில், இனி வரும் நாள்களில் தொடரின் காட்சிகளில் திருப்பம் ஏற்பட்டு, தொடர் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிஆர்பி புள்ளிகளும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
காதல் கொண்டேன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோனியா அகர்வால், 7ஜி ரெயின்போ காலனி, மதுர, கோவில், புதுப்பேட்டை, வின்னர் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இதெல்லாம் தேவையா தலைவரே? விமர்சனத்திற்கு ஆளாகும் ரஜினி!