செய்திகள் :

ஜப்பானைத் தெறிக்க விடும் அரிசிப் பஞ்சம்!

post image

என்னடா, மதுரைக்கு வந்த சோதனை? என்கிற திரைப்பட வசனத்தைப் போல வல்லரசுகளையே வைத்து செய்யக் கூடிய ஜப்பான் நாட்டுக்கும் ஒரு சோதனை வந்திருக்கிறது – அரிசியால். அரிசிப் பஞ்சத்தால் ஆட்சி மாற்றங்களைக் கண்ட ஊர் நம்முடையது. ஜப்பானிலும்கூட அப்படியாகிவிடுமோ என்றாகியிருக்கிறது தற்போதைய நிலைமை.

ஜப்பானிய பண்பாட்டிலும் பாரம்பரியத்திலும் ஏன், அரசியலிலும்கூட அரிசிக்கு மிகவும் முக்கியமான இடமிருக்கிறது. கடந்தபல பதிற்றாண்டுகளில் மக்களிடையே அரிசியின் மொத்தப் பயன்பாடு குறைந்திருந்தாலும்கூட, கொழகொழவென ஒட்டிக்கொள்ளக் கூடிய ஜப்போனிகா அரிசியின் மீது மக்கள் கொண்டுள்ள மோகம் மட்டும் குறைந்தபாடில்லை. எனவே, இன்னமும் உணவில் அரிசி முக்கியமான இடத்தைப் பெற்றுக்கொண்டுதானிருக்கிறது.

ஆனால், தற்போது மக்களுக்குத் தேவைக்கேற்ப அரிசி கிடைக்காத நிலையில் கடந்த கோடையிலிருந்து,  ஜப்பானில் அரிசி விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. அரிசி விலை நிலையாக இருக்க வேண்டும்; குறைந்துபோய் விவசாயிகளைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக,  நெல் சாகுபடி பரப்பைக் கட்டுக்குள் வைத்து, பிற பயிர்களைச் சாகுபடி செய்யவும் நீண்ட காலமாக விவசாயிகளுக்கு ஜப்பானிய அரசு மானியம் வழங்கிவருகிறது.

இந்த ஆண்டில் திடீரென நேரிட்ட அரிசி பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக  இருப்பிலுள்ள அரிசியை வெளிச் சந்தையில் அரசு விடுவித்தபோதிலும் இன்னமும் கடைகளுக்கு ஒழுங்காக வந்து சேராததால் பெருங்குழப்பம்.

கடந்த வாரத்தில் ஜப்பானிய வேளாண் துறை அமைச்சர் பதவி விலகியதற்கு  இவ்விஷயத்தில் மக்கள் கொண்டிருக்கும் கோபமும்கூட ஒரு காரணம் எனலாம். அரிசி கிடைக்காததால் மக்கள் ரொம்பவுமே வெறுத்துப் போயிருக்கின்றனர்.

ஏன் விலகினார்?

"நான் எப்போதும் அரிசி வாங்க வேண்டியதில்லை; ஏனெனில் என்னுடைய ஆதரவாளர்கள் எனக்குப் பரிசாக வழங்கிவிடுகிறார்கள்" என்று வேளாண் அமைச்சர் தகு இட்டோ, கருத்துச் சொல்லப் போக மக்கள் மிகவும் கடுப்பாகிவிடவே வேறு வழியின்றி கடந்த வாரம் அவர் பதவியிலிருந்து விலகினார்.

மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவும், சாப்பிட அரிசி வாங்கவும் பேரவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சரின் கருத்து பரவலாக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இட்டோ மன்னிப்பும் கேட்டார். ஆனாலும் வேறு வழியில்லை.

வரும் ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், ஏதாவது செய்து முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய முயற்சியாக வேறு வழியின்றி அமைச்சரைப் பதவி விலகச் செய்தார், நாட்டின் சிறுபான்மை அரசின் பிரதமரான ஷிகெரு இஷிபா.

இட்டோவைத் தொடர்ந்து வேளாண் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஷிஞ்சிரோ கொய்சுமி, ஜப்பானின் செல்வாக்குமிக்க வேளாண் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியவர். இப்போது அரிசி பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறார்.

அரிசிக்கு என்னாச்சு?

கடந்த கோடைக் காலத்தின்போது, பெரும் நிலநடுக்கம் ஏற்படக் கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, மக்கள் பெரும் பதற்றத்துக்குள்ளாகி, தேவைக்கு அதிகமான அரிசியை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கினர். இதனால்தான், அரிசி விலை இரு மடங்காக உயர்ந்ததுடன், கடைகளில் கிடைப்பதும் அரிதாகத் தொடங்கியது என்று கூறுகிறார்கள்.

நாட்டின் உயர்வகை அரிசியான கோஷிஹிகாரியின் தற்போதைய விலை, 5 கிலோவுக்கு  35 டாலர்கள் (ஜப்பான் மதிப்பில் 5 ஆயிரம் யென், நம்மூர்க் கணக்கில் கிலோ ரூ. 650!).

ஜப்பான் வேளாண் கூட்டுறவுகள் மற்றும் பிற மொத்த விற்பனையாளர்களிடம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததைவிடவும் தற்போது 4 லட்சம் டன்கள்  குறைவாகவே அரிசி கையிருப்பில் உள்ளது. அல்லாமல், முன்னெப்போதுமில்லாத வகையில் மொத்த இருப்பு மிகக் குறைவான அளவில் 1.53 மில்லியன் டன்களாக இருக்கிறது.

ஜப்பானில் இப்போதுதான் நெற்பயிர்கள் நடப்பட்டுள்ளன. இவை அறுவடைக்கு வர இன்னும் சில மாதங்களாகிவிடும் என்ற நிலையில், அரிசி பற்றாக்குறையைக் கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானிய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.

பற்றாக்குறைக்கும் விலையேற்றத்திற்கும் காரணம் என்ன?

அரிசி விலையை 5 கிலோவுக்கு 20 டாலர்களாக, சுமார் 3,000 யென்களாகக்  குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக பிரதமர் இஷிபா உறுதியளித்துள்ளார்.

விலைகளை ஏன் குறைக்க முடியவில்லை என்றே தெரியவில்லை என்று நாடாளுமன்றத்தில் ‘வெள்ளந்தியாகத்’ தெரிவித்த பிரதமர் இஷிபா, முதலில் எவ்வளவு அரிசி கைவசம் இருக்கிறது, அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி விலையைக் குறைக்கத் தற்போது மேற்கொண்ட முயற்சிகளால் பயனேற்படவில்லை என்பதையும் ஒப்புக்கொண்ட அவர்,  அரிசி தொடர்பான அரசின் கொள்கையில் ஏதோ சிக்கல் இருக்கிறது என்றிருக்கிறார்.

கடந்த கோடைக் காலத்தில் ஏற்பட்ட பதற்றம்தான் நிலைமையை மோசமாக்கியது. சுற்றுலா அதிகரித்ததும் மக்கள் வெளியே சாப்பிடுவது அதிகரித்ததும்கூட அரிசிக்கான தேவையை உயர்த்தியுள்ளது என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

ரஷியா - உக்ரைன் போர் காரணமாக கோதுமை விலை உயர்ந்து, ரொட்டி மற்றும் நூடுல்ஸ் விலைகளும் உயர்ந்ததால், அரிசி உணவைச் சாப்பிடுவோரின் தொகை அதிகரித்துள்ளது. மேலும்,  கடந்த ஆண்டுகளின் நெல் சாகுபடிகூட அதிக வெப்பம் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு காரணமாக மோசமாக இருந்தது.

ஜப்பானின் நெல் கொள்முதல் – விற்பனை வழிமுறைகளும் மிகவும் சிக்கலானவை. பெரும்பாலான விவசாயிகள் இன்னமும் தங்கள் நெல்லை ஜப்பான் வேளாண் கூட்டுறவுகள் மூலம் பாரம்பரிய முறைப்படிதான் விற்கிறார்கள், இந்த அமைப்புகள் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை.

ஆனால், பெருமளவில் பிற வழிகளிலும் ஆன்லைன் மூலமும் விற்கப்படுவதால், நலெ – அரிசி விற்பனையைக் கண்காணிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று தேசிய வேளாண் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகி மசயுகி கனமோரி தெரிவித்துள்ளார். தற்போதைய அரிசி பற்றாக்குறை சற்றும் எதிர்பாராதது. மிகவும் குழப்பமாகத்தான் இருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.

இதுவரை என்ன செய்திருக்கின்றனர்?

அவசரகால அரிசி இருப்பை விடுவிப்பதில் தாமதம் செய்ததற்காகவும் தேவை - விநியோக நிலவரத்தைச் சரியாக மதிப்பிடாதற்காகவும் வேளாண் அமைச்சகம் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. விடுவிக்கப்பட்ட அரிசி இருப்பில் 10 சதவிகிதம் மட்டுமே இதுவரையில்  சந்தைக்கு வந்திருக்கிறது. அப்படியானால், என்ன நடக்கிறது, அரிசி எங்கே செல்கிறது என்று பலப்பல சந்தேகங்கள் எழுகின்றன.

அரிசியின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விற்பனையில் உச்சவரம்பை நீக்குவது உள்பட சில திட்டங்களை வேளாண் அமைச்சர் கொய்சுமி அறிவித்துள்ளார்.

இன்னொரு பிரச்சினை, இருப்பு வைக்கப்பட்டுள்ள பழுப்பு அரிசியை ஜப்பானியர்கள் விரும்புகிற மாதிரியான வெள்ளைவெளேர் அரிசியாகத் தீட்டி   மாற்றுவதற்குப் போதுமான ஆலைகளும் ஜப்பானில் இல்லை. மேலும், சில மொத்த விற்பனையாளர்கள், இன்னமும் விலை உயரட்டும் என்பதற்காக அரிசியைப் பதுக்கிவைத்திருக்கின்றனர் என்றும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அரிசி விலை மிகவும் குறைந்துவிடக் கூடும் என்று அஞ்சி இருப்புகளை வெளியிட மறுத்துவரும் அரசு, நெல் சாகுபடியை அதிகரித்து, உபரி ஏற்படும்பட்சத்தில் ஏற்றுமதி செய்திருந்தால் இந்தப் பிரச்சினையைத் தவிர்த்திருக்கலாம் என்று  கேனான் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஸ்டடீஸ் ஆய்வு இயக்குநர் கசுஹிட்டோ யமாஷிடா தெரிவித்துள்ளார்.

"நெல் சாகுபடிப் பரப்பைக் குறைப்பது உணவுப் பாதுகாப்புக்கு எதிரானது, இதுவோர் அழிவுகரமான கொள்கை" என்றும் யமாஷிடா கூறுகிறார். இதனிடையே,  அதிகரித்து வரும் சாகுபடிச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு, அரிசி  விலையொன்றும் மிகவும் அதிகமாக இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

எப்படியென்றாலும், நெல் சாகுபடி விஷயத்தில் ஒரு நீண்டகால உத்தியை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் இருக்கிறது. ஏனெனில், ஜப்பானில் இப்போது நெல் பயிரிடும் விவசாயிகளின் சராசரி வயது 69 ஆக இருக்கிறது. அதாவது, எல்லாருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. இளைய தலைமுறைகள், இந்தியாவைப் போலவே, வேளாண்மைக்கு வருவதில்லை. கடந்த இருபது  ஆண்டுகளில் விவசாயம் செய்வோரின் தொகை பாதியாகக் குறைந்துவிட்டது.

நுகர்வோரும் சில்லறை வணிகர்களும் என்ன செய்கிறார்கள்?

வேறு வழியில்லை. என்ன விலையென்றாலும் அரிசி வாங்கிதான் ஆக வேண்டியிருக்கிறது என்று குறிப்பிடும் டோக்கியோ, கவாசாகியைச் சேர்ந்த ஹிரோமி அகாபா, இதே நிலைமை தொடர்ந்தால், அரிசி சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டியதுதான் என்கிறார்.

பல கடைகள் அரிசி விற்பதில் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றன. ஒரு முறை வரும்போது, வாடிக்கையாளருக்கு ஒரு பை அரிசி மட்டுமே விற்கின்றன. பிரச்சினை என்னவாக இருந்தாலும் அரிசி விற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கடைக்காரர்களில் சிலர் இறக்குமதி செய்யவும் தயங்குவதில்லை.

உலகின் நாலாவது பொருளாதாரமென்ற பெருமை கொண்ட ஜப்பான் நாட்டின் மக்கள், அன்றாட உணவான அரிசிக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகளும் எகிறிவிட, அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் அரசும் சமாளிக்க முடியாமல் என்னென்னவோ செய்தவாறு கையைப் பிசைந்துகொண்டிருக்கிறது!

[செய்தி நிறுவனங்களின் தகவல்களுடன்]

சிகரெட் விற்பனைக்கு தனி உரிமம்: புகையிலை புழக்கத்தை குறைக்க அரசு முன்முயற்சி

சென்னை: தமிழகத்தில் பொது இடங்களிலும், கல்வி வளாகங்கள் அருகிலும் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பீ... மேலும் பார்க்க

30 ஆண்டுகளுக்கு முன் 30 உயிர்கள்! சாலையோர சவக் கிணறுகளும் அரசு சுற்றறிக்கைகளும்...

சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் வேன் விழுந்து 5 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தடுப்பு ஏற்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கையொன்றைத் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலர் அனுப்பியுள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

போா்களின் போக்கை மாற்றும் ‘ட்ரோன்’ ஆயுதங்கள்! 4 நாள் சண்டைக்கு ரூ. 15,000 கோடி செலவு!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய பதற்றத்தின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. துல்லிய தாக்குதலுக்கு மறுஉத... மேலும் பார்க்க

உப்பை குறைத்தால் உயிா் காக்கலாம்!

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக மருத்துவ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், கடந்த சில ஆண்டுகளில் மட்டும் உயா் ரத்த அழுத்ததத்துக்கு ஆளாகும் இளைஞா்கள், பதின் ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு விவரம்!

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கை... மேலும் பார்க்க