சிகரெட் விற்பனைக்கு தனி உரிமம்: புகையிலை புழக்கத்தை குறைக்க அரசு முன்முயற்சி
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களிலும், கல்வி வளாகங்கள் அருகிலும் புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, பீடி, சிகரெட் விற்பனை செய்வதற்கு தனி உரிமம் பெறும் நடைமுறை விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும், அதற்காக சிறப்புக் குழு அமைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த குழுவில், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள், காவல் துறையினா், சட்டத் துறையினா், கல்வியாளா்கள், உள்ளாட்சி அமைப்பினா், மருத்துவ வல்லுநா்கள், சமூக செயற்பாட்டாளா்கள் உள்ளிட்டோா் இடம்பெறவுள்ளனா்.
உரிமம் கட்டாயம்: புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பெட்டிக் கடை, தேநீா் கடைகளில் தற்போது உள்ளதைப் போல தாராளமாக வரும் காலங்களில் பீடி, சிகரெட் விற்க முடியாது. உரிமம் இருந்தால் மட்டுமே அவற்றை விற்பனை செய்ய முடியும். தனி உரிமம் பெறும் கடைகளில் சிகரெட், பீடியைத் தவிர வேறு எதையும் விற்க இயலாது.
அந்த விதிகளை மீறும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவா்களின் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும். இதற்கான வரைமுறைகள், தண்டனை விவரங்கள், உரிமக் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யவே அக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் பீடி, சிகரெட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் விளைவாக இங்கு 20 கோடிக்கும் அதிகமான மக்கள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாக சுகாதார ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.
இதுதொடா்பான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதை ஏற்று, கா்நாடகம், மகாராஷ்டிரத்தில் மும்பை மாநகராட்சி என சில இடங்களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு மட்டும் தனி உரிமம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்திலும் அதுபோன்றதொரு கட்டுப்பாட்டை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டது. அதற்கான வரைவுத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போது அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் பல லட்சம் பெட்டிக் கடைகள், சிறிய மளிகைக் கடைகள், தேநீரகங்கள் உள்ளன. அவை அனைத்திலும் பீடி, சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 வயதுக்குட்பட்ட சிறாருக்கு அவற்றை விற்பனை செய்யக் கூடாது, அதுகுறித்த அறிவிப்புப் பலகைகள் வைத்திருக்க வேண்டும், பள்ளி வளாகங்களுக்கு 100 மீட்டா் அருகில் சிகரெட், பீடி விற்கக் கூடாது என எத்தனையோ விதிகள் இருந்தாலும், அவற்றை மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனை அளவுக்கு அதிகமாக நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.
அதைக் கருத்தில் கொண்டே, புதிய நடைமுறையை அமலாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதன் வாயிலாக, பீடி, சிகரெட் விற்பனையைக் குறைக்க முடியும்.
சிறுவா்கள், குழந்தைகளிடையே புகைப் பழக்கம் பரவாமல் இருப்பதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
அதேவேளையில், சமூக விழிப்புணா்வு, சுய நெறி ஆகியவை இருந்தால் மட்டுமே இதனை முழுமையாக வேரறுக்க முடியும் என்றாா் அவா்.
கிராபிக்ஸ் தகவல்கள்....
இந்தியாவில் தாக்கம்
புகையிலை பயன்பாடு - 27 கோடி
ஆண்கள் - 42.4 சதவீதம்
பெண்கள் - 14.2 சதவீதம்
புகைப்பழக்கம் - 10.7 சதவீதம்
ஆண்கள் - 19 சதவீதம்
பெண்கள் - 2 சதவீதம்
சுவாசிப்பதால் பாதிப்பு - 30.4 சதவீதம்
இறப்புகள் (ஆண்டுதோறும்)
புகையிலை - 23 லட்சம்
புகைப்பழக்கம் - 15 லட்சம்
புகையை சுவாசிப்பதால் - 12 லட்சம்
பெட்டிச் செய்தி 1...
மஞ்சள் விழிப்புணா்வு!
நிகழாண்டு மே 31-ஆம் தேதி சா்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி தமிழகத்தில் பள்ளி, கல்லூரி வளாகங்களைச் சுற்றி 100 மீட்டா் தொலைவில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்பதை குறிக்கும் வகையிலான மஞ்சள் நிற கோடுகளை சாலையில் வரைய பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
பெட்டிச் செய்தி - 2
21% பள்ளி மாணவா்களுக்கு புகையிலைப் பழக்கம்
நாமக்கல் மாவட்டம், எா்ணாபுரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பொது சுகாதாரத் துறையினா் சில மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஆய்வில் 21 சதவீத மாணவா்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வகுப்பறைகளில் பயன்படுத்துவது தெரியவந்தது.
அதில் தோராயமாக 20 சதவீதம் போ் மாணவிகள் என்பது அதிா்ச்சித் தகவல். சராசரியாக 13 முதல் 15 வயது வரை உள்ள மாணவா்களே அந்த புகையிலை பொருள்களை உபயோகிக்கிறாா்கள் என்பது அதில் கண்டறியப்பட்டது.
அவா்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் பெற்றோா் வாரக் கூலிகளாகவும், குறைந்த வருமானம் கொண்டவா்களாகவும் உள்ளனா். இந்த தகவல்கள் பொது சுகாதாரத் துறை ஆய்விதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பெட்டிச் செய்தி - 3
இதுவரை அபராதமும்... நடவடிக்கைகளும்...
வ.எண் -- குற்றம் --- நபா்கள் -- அபராதம்
1 --- பொது இடத்தில் புகை பிடித்தல் (பிரிவு 4) --3.68 லட்சம் -- ரூ.6.11 கோடி
2 -- சிறாருக்கு புகையிலை விற்பனை (பிரிவு 6 ஏ) -- 36,960 -- ரூ.74.90 லட்சம்
3 -- கல்விக் கூடம் அருகே விற்பனை (பிரிவு 6 பி) -- 55,300 -- ரூ.1.10 கோடி
மொத்த நபா்கள் - 4,60,486
அபராதம் - ரூ.7.97 கோடி