ஜம்மு விரையும் முதல்வர் உமர் அப்துல்லா
ஜம்மு: ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் தோல்வி அடைந்ததை அடுத்து அடுத்தகட்ட நிலைமையை ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் ஜம்மு செல்கிறேன் என முதல்வர் உமர் அப்துல்லா என கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 இடங்களில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா உறுதிப்படுத்தியிருந்தது. எனினும், ஜம்மு-காஷ்மீா் எல்லையில் மோதலைத் தீவிரப்படுத்தி, மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் தொடா்ச்சியாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய வடக்கு மற்றும் மேற்கு எல்லையோர மாநிலங்களை வான்வழியாகத் தாக்கும் பாகிஸ்தான் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.
இதனிடையே, ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள ராணுவ நிலையங்களைத் தாக்க பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட முயற்சியை இந்தியா வியாழக்கிழமை இரவு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் முறியடித்தது, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் பதட்டங்கள் அதிகரித்தன.
வியாழக்கிழமை இரவு அக்னூர், சம்பா, பாரமுல்லா மற்றும் குப்வாரா மற்றும் பல இடங்களில் சைரன்கள் மற்றும் ஏராளமான வெடிகுண்டுகள் வெடித்த சப்தம் கேட்டப்படியே இருந்தன.
ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் இரவு முழுவதும் தாக்குதல்: இந்தியா பதிலடி
இந்த நிலையில், ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் ஜம்மு செல்கிறேன் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளார்.
மேலும், எல்லையில் நிலவும் போர் பதற்றதை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் மேலும் இரண்டு நாள்கள் மூடப்படும் என வியாழக்கிழமை உத்தரவிடப்பட்ட நிலையில், எல்லையில் நிலவும் சூழ்நிலையைப் பொறுத்து, பள்ளி, கல்லூரிகள் மூடல் நீட்டிக்கப்படுமா, அப்படியானால், எவ்வளவு காலம் மூடப்பட்டும் என்பதை திங்கள்கிழமை அரசு மறுபரிசீலனை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்த பிறகு, இந்தியா "தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முழுமையாகத் தயாராக உள்ளது" என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.