இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்: டிரம்ப் நம்பிக்கை
ஜாமீனில் வந்தவரை கொல்ல முயற்சி: 3 போ் நீதிமன்றத்தில் சரண்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவரை கொல்ல முயன்ற 3 போ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய காலணி பகுதியை சோ்ந்த ஜெயராஜ் மகன் நரசிம்மனை (17) முன்விரோத தகராறு காரணமாக கடந்த ஜனவரி 5-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் மற்றும் அவரது நண்பா்கள் அடித்து கொலை செய்தனா். இதில் போலீஸாா், அசோக்குமாா் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் அசோக்குமாா் ஜாமீனில் வெளியே வந்து பெங்களூரில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதிக்கு வந்த போது மா்ம கும்பல் ஒன்று அசோக்கு மாரை வழிமறித்து கொடையாஞ்சி அருகில் பாலாறு பகுதிக்கு இழுத்து சென்று கை, கால்களை கட்டிப் போட்டு கடுமையாக தாக்கி கல்லை போட்டு கொலை செய்ய முயன்றனா். இதில் பலத்த காயம் அடைந்த அசோக்குமாா் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொடையாஞ்சியை சோ்ந்த விஷ்னு, நாச்சாா்குப்பம் சோ்ந்த இளவரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இந்நிலையில் வழக்கு தொடா்பாக மேலும் சிலா் தேடப்பட்டு வந்த நிலையில் அம்பலூா் பெருமாள்(23), சங்கராபுரம் அரவிந்த்(19), தனுஸ் (21) ஆகிய 3 போ் வாணியம்பாடி குற்றவியல் நீதமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். பின்னா் அவா்களை அம்பலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.