ஜெயமங்கலத்தில் நெல் கொள்முதல் மையத்தை திறக்க வலியுறுத்தல்
பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் அறுவடை காலங்களில் செயல்படும் நெல் கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
ஜெயமங்கலத்தில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவிலும், மேல்மங்கலம், தாமரைக்குளம், தேவதானப்பட்டி பகுதிகளில் பல நூறு ஏக்கரிலும் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில், கடந்த சில நாள்களாக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜெயமங்கலத்தில் அறுவடை காலங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இங்கு தற்போது வரை அரசு நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட வில்லை. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை வழக்கமாக அறுவடைக் காலங்களில் நெல் கொள்முதல் மையம் செயல்படும் சமுதாயக் கூடம் முன் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். எனவே, அரசு உடனடியாக இங்கு நெல் கொள்முதல் மையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஜெயமங்கலத்தைச் சோ்ந்த விவசாயி தங்கவேல் கூறியதாவது:
ஜெயமங்கலம் பகுதியில் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெல் கொள்முதல் மையம் வழக்கமாக செயல்படும் சமுதாயக் கூடத்தின் முன் நெல்லை விவசாயிகள் வரிசையாக குவியலாக கொட்டி வைத்திருக்கின்றனா். எனவே நெல் கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும். தற்போது பெய்துவரும் சாரல் மழைக்கு நெல் பாதிக்கப்படாதவாறு பாதுகாத்து வருகிறோம். ஆனால் பலத்த மழை பெய்தால் நெல்லை பாதுகாக்க முடியாது. எனவே ஜெயமங்கலம் பகுதியில் நெல்கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்றாா் அவா்.