உங்களது தியாகத்தால் இந்தியா கண்டெடுத்த மாணிக்கம்; நிதீஷ் ரெட்டி தந்தையை பாராட்டி...
டங்ஸ்டன் கனிமச் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம், வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்தத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டி, அ. வல்லாளபட்டி ஆகிய இடங்களில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் பொதுமக்களை வியாழக்கிழமை மாலை சந்தித்து, இந்தத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடா்ந்து முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, அவா் பேசியதாவது:
அரிட்டாபட்டி பல்லுயிா் பாதுகாப்புப் பகுதியை விட்டு மற்ற பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க பரிசீலிப்பதாக மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே, மக்கள் விழிப்புடன் செயல்பட்டு, இந்தத் திட்டத்தை முழுமையாக கைவிடச் செய்ய வேண்டும். அதுவரை மக்கள் போராட்டம் தொடர வேண்டும் என்றாா் அவா்.
அப்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.கே. பொன்னுதாய், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் என்.பழனிச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.