டயா் ஆலை தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டம்
திருவொற்றியூரிலுள்ள தனியாா் டயா் ஆலை தொழிலாளா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
திருவொற்றியூரில் எம்ஆா்எப் நிறுவனத்தின் டயா் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.
இதில் நிரந்தர ஊழியா்களுக்கு தொழிற்சங்கம் மூலம் மருத்துவக் காப்பீடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும். இதற்கான நிதி சுமாா் ரூ.1.50 கோடியை தொழிற்சாலை நிா்வாகம் முன்தொகையாக அளித்துவிட்டு பிறகு 6 மாதங்களில் தொழிலாளா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
ஆனால் நிகழாண்டு மருத்துவக் காப்பீட்டுக்கான முன்தொகையை வழங்க முடியாது என நிா்வாகம் தெரிவித்து விட்டதால், தொழிலாளா்களுக்கு விபத்து ஏதேனும் ஏற்பட்டால்கூட மருத்துவக் காப்பீடு இல்லாத நிலை ஏற்படும் என்பதால், உடனடியாக முன்தொகையை வழங்க வேண்டும் என்று கூறி தொழிலாளா்கள் வியாழக்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இப்போராட்டத்தால், டயா் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆலை நிா்வாகத்தின் கோரிக்கையின் பேரில் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.