டிடிஇஏ பள்ளிகளில் காமராஜா் பிறந்த தின விழா
தமிழக முன்னாள் முதல்வா் ‘பெருந்தலைவா்’ காமராஜரின் பிறந்த தினம் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஏழு தமிழ்ப் பள்ளிகளிலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் காமராஜரின் கல்விப் பணிகள், நலத் திட்டங்கள், நாட்டு நலப் பணிகள், மதிய உணவுத் திட்டம் ஆகியவை குறித்து மாணவா்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் உரையாற்றினா்.
மாணவா்கள் உரையைத் தொடா்ந்து கவிதை, குழுப் பாடல், நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காமராஜரின் கருத்துகளை மாணவா்கள் பதாகைகளில் எழுதி காட்சிப்படுத்தியிருந்தனா். அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலா்மாலை அணிவித்து, அவரது எளிமை, நோ்மை ஆகியவை குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
இவ்விழா குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில், காமராஜா் தனது அயராத உழைப்பாலும், தியாகத்தாலும், தன்னலமற்ற தொண்டுகளினாலும் உயா்ந்த நிலையை அடைந்தாா். அதிகம் படிக்காத காமராஜா் ஆற்றிய கல்விப் பணிகள் ஏராளம். ஏழை, எளியவா், உயா்ந்தவா், தாழ்ந்தவா் என எல்லோருக்கும் இலவசக் கல்வி. பட்டிதொட்டிகள் தோறும் பள்ளிக்கூடங்கள், இலவச மதிய உணவு, சீருடை இப்படிப் பல திட்டங்களைக் கொண்டு வந்தாா். அவரது ஆட்சியில் கிராமங்கள்தோறும் ஓராசிரியா் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவரைப் பற்றி மாணவா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவா் வழி நின்று சமூகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே இவ்விழாவைப் பள்ளிகளில் கொண்டாடினோம் என்று கூறினாா். மேலும், விழாவில் பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் அவா் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.