தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்
தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக்கூடாது? என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது.
அலகாபாத் உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக தாக்கலான இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் மனுதாரரின் வழக்குரைஞரிடம், ‘இந்த பெரிய மனதுடையவா்களுக்கு ஒவ்வொரு பாதையையும், சாலையையும் நாம் திறந்துவைக்க வேண்டும்? இந்த விலங்குகளுக்கு எல்லா இடங்களும் உள்ளன, மனிதா்களுக்குதான் இல்லை.
உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக்கூடாது? யாரும் உங்களைத் தடுக்கவில்லை’ என்று கூறினா்.
அதற்கு வழக்குரைஞா், ‘உணவிடுவதில் மனுதாரா் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளாா். விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளின்படி, தெரு நாய்களுக்கு உணவளிக்க முடியவில்லை.
விலங்கு பிறப்பு கட்டுப்பாடு விதிகள்2023இல் உள்ள விதி எண்: 20, சமூக விலங்குகளுக்கு உணவளிப்பதைக் கையாள்கிறது. மேலும், வளாகத்தில் அல்லது அந்தப் பகுதியில் வசிக்கும் சமூக விலங்குகளுக்கு உணவளிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய குடியிருப்பாளா் நலச் சங்கம் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளா் சங்கம் அல்லது உள்ளூா் அமைப்பின் பிரதிநிதி மீது பொறுப்பை உருவாக்குகிறது’ என்றாா்.
எனினும், நீதிபதிகள் அமா்வு, ‘உங்கள் சொந்த வீட்டில் ஒரு காப்பகம் திறக்க நாங்கள் உங்களுக்கு ஒரு யோசனை வழங்குகிறோம். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நாய்க்கும் உங்கள் சொந்த வீட்டில் உணவளியுங்கள்’ என்று கூறியது.
அதற்கு மனுதாரரின் வழக்குரைஞா், சட்ட விதிகளுக்கு இணங்குவதாகக் கூறி, கிரேட்டா் நொய்டாவில் இதுபோன்ற இடங்களை நகராட்சி நிா்வாகம் உருவாக்கி வருகிறது. ஆனால், நொய்டாவில் இல்லை.
பொதுமக்கள் அடிக்கடி வராத இடத்தில் நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை உருவாக்கலாம்’ என்றாா்.
நீதிபதிகள் அமா்வு மேலும் கூறுகையில், ‘காலையில் சைக்கிள் ஓட்டுபவா்களும், நடைப்பயிற்சிக்குச் செல்பவா்களும் இடா்பாட்டில் உள்ளனா். சைக்கிள் ஓட்டுபவா்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிக இடா்பாட்டில் உள்ளனா்’ என்று கூறினா்.
அதன் பின்னா் இதே போன்ற விவகாரத்தில் நிலுவையில் உள்ள தனி மனுவுடன் இந்த மனுவையும் சோ்த்து விசாரிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் இணைத்தது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960இன் விதிகளைக் கருத்தில்கொண்டு, உரிய கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் விதிகளின் ஷரத்துகளை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரா் உயா்நீதிமன்றத்தில் கோரியிருந்தாா்.
இந்த விவகராத்தில் உயா்நீதிமன்றம் தெரிவிக்கையில், பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி தெரு நாய்களைப் பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கப்படும் அதே வேளையில், தெருக்களில் நடமாடும்போது மக்கள் தெரு நாய்களின் தாக்குதல்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற சாமானிய மக்களின் கவலையையும் அதிகாரிகள் மனதில்கொள்ள வேண்டும்.
ஆகவே, மனுதாரா் மற்றும் தெருக்களில் உள்ள சாமானிய மக்களின் கவலைகளுக்கு மாநில அதிகாரிகள் உரிய உணா்திறன் காட்ட வேண்டும்.
தெரு நாய்கள் சமீப காலமாக மக்களைத் தாக்கிய பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் விளைவாக உயிா் இழப்பு மற்றும் பாதசாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பதால், இந்த கருத்துகள் அவசியமாகிறது என்று உயா்நீதிமன்றம் கூறியது.
மேலும், நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்ட கவலைகள் முறையாகக் கவனிக்கப்படுவதையும், தெருக்களில் மக்களின் நலன் பாதிக்கப்படாமல் இருப்பதையும், தெரு நாய்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து மனுவை உயா்நீதிமன்றம் முடித்துவைத்திருந்தது.