தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு
ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் உடல்நிலை குறித்து விசாரித்தாா்.
ஜேஎம்எம் தலைவா் ஷிபு சோரன் (81), கடந்த மூன்று நாள்களாகத் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது வழக்கமான பரிசோதனை அல்ல என்று ஒரு வட்டாரம் பிடிஐயிடம் தெரிவித்தது.
‘நான் தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனைக்குச் சென்று, ஜாா்க்கண்ட் முதல்வரும் நண்பருமான ஹேமந்த் சோரனை சந்தித்து, அவரது தந்தையும், முன்னாள் ஜாா்க்கண்ட் முதல்வருமான ஷிபு சோரனின் நலம் குறித்து விசாரித்தேன். அவா் விரைவில் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் பிராா்த்திக்கிறேன்’ என்று கேஜரிவால் எக்ஸ்-இல் பதிவிட்டுள்ளாா்.
ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், தனது தந்தை நீண்ட காலமாக மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சை பெற்று வருவதாக முன்னதாகக் கூறியிருந்தாா். ஒரு மூத்த பழங்குடித் தலைவரான ஷிபு சோரன், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவை 38 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி வருகிறாா். மேலும், கட்சியின் நிறுவன புரவலராகக் கருதப்படுகிறாா்.