டூவிலரில் வீடியோ எடுத்துக் கொண்டே 25 தெருநாய்களை சுட்டுக்கொன்ற நபர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் தெருநாய்களை மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்ற படி வீடியோ எடுத்துக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்குள்ள குமாவாஸ் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது. இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் தெருக்களில் சென்றபடி தெருநாய்களை விரட்டி விரட்டி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதனால் தெருக்களில் ஆங்காங்கே தெருநாய்கள் இறந்து கிடந்தன. அந்த வாகனத்திற்கு பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனம் வந்தது. இதில் இருந்த நபர் முன்னால் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே செல்வதை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தபடி சென்றார்.

இரவில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்ற நிலையில், காலையில் தெருக்களில் நாய்கள் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில் அருகில் உள்ள தும்ரா என்ற கிராமத்தைச் சேர்ந்த சியோசந்த் என்பவர் இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதோடு அவர்கள் துப்பாக்கியால் சுட்டு நாய்களை கொன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இக்காரியத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொத்தம் 25 நாய்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததை உறுதி செய்த காவல்துறையினர், அந்த கிராமத்தில் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.