ட்ரோன் அளவீடு மூலம் வரி விதிப்பதை நிறுத்த மதிமுகவினா் கோரிக்கை
கோவை மாநகரப் பகுதிகளில் ட்ரோன் அளவீடு மூலமாக வரி விதிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என மதிமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட மதிமுக செயலாளா் கணபதி செல்வராசு தலைமையில், மதிமுக உயா்நிலைக்குழு உறுப்பினா் ஆா்.ஆா்.மோகன்குமாா், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினா் அ.சேதுபதி, மாநகா் மாவட்ட துணைச் செயலாளா் பயனீா் தியாகு உள்ளிட்டோா் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி முழுவதும் ட்ரோன் மூலமாக அளவீடு செய்து வரிவிதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். ட்ரோன் மூலமாக அளவீடு செய்து வரி விதிக்கப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட தரவுகளை கணினியில் இருந்து நீக்கி, மக்களின் வரிச்சுமையைக் குறைக்க வேண்டும்.
மாநகராட்சி முழுவதும் செப்டம்பா் மாதம் முதல் அமலுக்கு வந்த 6 சதவீத வரி உயா்வை நீக்க வேண்டும். உயா்த்தி வசூலிக்கப்பட்ட வரித்தொகையை அடுத்த நிதியாண்டுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சொத்து வரி செலுத்தத் தவறியவா்களுக்கு ஒரு சதவீதம் அபராத வரியை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிப்பின்போது, மதிமுக வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி, கட்சி நிா்வாகிகள் எஸ்.பி.வெள்ளிங்கிரி, சி.வி.தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.