ஐயப்பன் மாநாடு, ஸ்டாலினுக்கு அழைப்பு: "இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகும்..."...
தஞ்சை மாவட்டத்தில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 8 மாதங்களில் 2,073 புகாா்கள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 2 ஆயிரத்து 73 புகாா்கள் பெறப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டு, 2 ஆயிரத்து 73 புகாா்களை பொதுமக்கள் இணையவழியில் அளித்துள்ளனா்.
இதன் பேரில், தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் 2 ஆயிரத்து 73 பேருக்கு சமூக சேவை பதிவேடு (சி.எஸ்.ஆா்.) வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 33 புகாா்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் தொடா்புடைய தில்லியைச் சோ்ந்த 9 போ் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பொதுமக்கள் சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இழந்த தொகையான ரூ. 19.96 கோடியில் தொடா்புடைய வங்கிகளில் பாதிக்கப்பட்டவா்களின் தொகை ரூ. 90.40 லட்சம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இத்தொகையில் ரூ. 58.45 லட்சம் விரைவான நடவடிக்கையின் மூலம், நீதிமன்ற உத்தரவின்படி மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்குக்கு திரும்ப வரவு வைக்கப்பட்டது. தற்போது அதிகளவில் வயதானவா்களை குறி வைத்து ஏமாற்றுகின்றனா்.
மேலும், சி.பி.ஐ. அதிகாரி போல தொடா்பு கொண்டு பொதுமக்களின் ஆதாா் அட்டையைப் பயன்படுத்தி பெறப்பட்ட சிம்காா்டின் மூலம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.
பொதுமக்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஹவாலா பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவா்கள் சொல்லும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சொல்லி அதிகளவில் ஏமாற்றி வருகின்றனா்.
பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு அரசு உதவித்தொகை வந்திருப்பதாக கூறி ஏமாற்றுகின்றனா். வங்கிக் கணக்கின் ஆவணங்களை மறு ஆய்வு செய்தல் என்ற பெயரில், அப்டேட் செய்ய வைத்து, விவரங்களைப் பெற்று மோசடியில் ஈடுபடுன்றனா்.
டெலிகிராம் செயலி மூலம் போலியான வா்த்தக தகவல்களைப் பதிவிறக்கம் செய்ய வைத்து, பணத்தை முதலீடு செய்தால், 500 சதவீதம் லாபம் பெறலாம் எனக் கூறி ஏமாற்றுவது, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் டி.பி.-யில் உள்ள புகைப்படத்தை எடுத்து ஆபாச படமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டுவது மற்றும் வெளியிடுவது போன்ற மோசடிகள் பரவலாக நடைபெற்று வருகின்றன.
இதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் துண்டறிக்கைகள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.